லெபனானில் வெடிவிபத்து – உருக்குழைந்தது பெய்ரூட்

லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று(04.08.2020) இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து சம்பவம் நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியுள்ளது. சம்பவத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தால் பெய்ரூட் நகரிலிருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பெரும் போரினான் சிதைவுற்ற நகர் போல பெய்ரூட் நகர் காட்சியளிக்கின்றது. இச் சம்பவத்தில் பெய்ரூட் நகரில் இருந்த ஒரு கோட்டை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த வெடிவிபத்து நில அதிர்வில் 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டுள்ளது, ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நகரத்துக்கும் இந்த சத்தம் கேட்டு, அதிர்வு உணரப்பட்டுள்ளது. கொரோனாப் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் லெபனான் நாடு திண்டாடிவரும் நிலையில் இந்த வெடிவிபத்து பேரிடியாக அமைந்துள்ளது. இந்த வெடிவிபத்து நடந்தபின் ஏராளமான அம்புலன்ஸ்கள் வீதிகளிலும், வீடுகளிலும் கிடக்கும் உடல்களைக் கொண்டு சென்றவாறு இருந்தன. சிறிது நேரத்தில் வைத்தியசாலைகள் அனைத்தும் நிரம்பியதால், காயமடைந்தவர்களைச் சாலையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமையே மிகப்பெரிய வெடிவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் தெரிவித்துள்ளார். துறைமுக களஞ்சியசாலையில் உரிய பாதுகாப்புடன் இரசாயனம் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். இந்த இரசாயனம் 06 வருடங்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்து ஐந்து நாட்களில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

பெய்ரூட் நரில் இடம்பெற்ற வெடிவிபத்தையடுத்து லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் உயர் பாதுகாப்பு பேரவையை அவசரமாகக் கூட்டியதுடன் பெய்ரூட் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவித்துள்ளார். விபத்தையடுத்த லெபனானில் 3 நாட்கள் துக்கதினத்தை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசாங்கம் 66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

இரு நாடுகளிடையே சிறந்த இருதரப்பு உறவுகள் காணப்படாவிடினும் லெபனானுக்குத் தேவையான உதவிகளை வழங்கவுள்ளோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அரசியல் ஊடகங்களூடாக வெளிவிவகார அமைச்சு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் பதில் பிரதமர் பென்னி கன்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். உலக அரச தலைவர்கள் பலரும் அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். லெபனானுக்கு ஆதரவாக பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். லெபனானுக்குத் தேவையான உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சாதகமான அனைத்து வழிகளிலும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கத் தயாரகவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே, லெபனானுக்கு தேவையான மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குகின்றோம் எனக் கட்டார் தெரிவித்துள்ளது. இதுவாரு பயங்கரமான வெடிப்புச் சம்பவமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனானுடன் சிறந்த நட்புறவு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர், அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாரெனவும் கூறியுள்ளார்.

லெபனானின் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால், தூதரக ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் லெபனானுக்கான இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளது. வெடிப்புச் சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்வில் தூதரகத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *