நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இலங்கையின் சகலபகுதிகளிலும் சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் திணைக்களமானது முடியுமானவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 7 வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 16 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.
இதன்போது கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.