இப்படிக் கேட்டது வேற யாருமல்ல என்னுடைய நண்பர் அதிதரனும் அவருடைய நண்பர் தர்சனும். இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அதிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி. கருணாவின் பிளவுக்கு முன்னதாகவே இயக்கத்தை விட்டு வெளியேறியவர். அவர்களுடைய கேள்வி யாழ்ப்பாணத்தார் எல்லாம் வெளிநாட்டுக்கு வர உயிரைக் கொடுத்து போராடியது நாங்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் தந்த பட்டம் காட்டிக் கொடுத்தவங்கள் என்று. நாங்கள் பிரிந்த பிறகு உங்களால் ஒரு யுத்தத்தை தன்னும் வெல்ல முடிந்ததா? நீங்கள் வெளிநாடுகளுக்கு வந்து உங்கட உங்கட ஊர்களுக்கு செய்கிறியள் “எங்கட சனத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று என்னைக் கேட்டனர். உண்மையிலேயே என்னிடம் பதில் இல்லை.
கடந்த பத்து வருடங்களாக லிற்றில் எய்ட் கணணிக் கல்வி நிலையம் கிளிநொச்சியில் இயங்குகிறது. கிழக்கில் நாங்கள் குறிப்பாக எதுவும் செய்யவில்லை. மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. மிகச் சிறிய வீதத்தினரே ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே செய்வது மிகக் குறைவு. அப்படிச் செய்தாலும் வடக்கைத் தாண்டுவது இன்னும் குறைவு. வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்று கூப்பாடு போடும் யாரும் செயலளவில் கிழக்கை புறக்கணித்தே வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் வலி மிகக் கொடியது. மௌனம் மட’டுமே பதிலாகிறது.