கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இதேவேளை, இரணைமடுக்குளத்தில் மீன் பிடிப்பதற்கு படையினர் அனுமதிக்காமை குறித்து அங்குள்ள இராணுவ அதிகாரிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரணைமடுக்குளத்தில் மீன்பிடிக்க அனுமதி வழங்குமாறு இராணுவ அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அண்மையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள கிளிநாச்சி சாந்தபுரம் மக்கள் முன்னர் இரணைமடுக்குளத்தில் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர். தற்போது மீன்பிடிப்பதற்கு படையினர் அனுமதி மறுத்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சாந்தபுரம் கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடமும் இம்மக்கள் இது குறித்து முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.