தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

David_Burgess_SoniaDavid_Burgessடேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வு நேற்று (நவம்பர் 17, 2010) சென் மார்டின் இன் தி பீல்ட் இல் நடைபெற்றது. முற்போக்குத் தன்மைக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயம் சென் மார்ட்டின் இன் தி பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேவாலயம் தற்பால் உறவுகளை அங்கீகரிக்கின்ற தேவாலம். இங்கு டேவிட் பேர்ஜஸ், சோனியா என்ற பெயரில் சேவையில் ஈடுபட்டு இருந்தவர். இங்கு ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் உடலை வைத்து பாடல்களுடன் அவரது இறுதி அஞ்சலி இடம்பெற்றது. மனித உரிமை அமைப்புகள், மெடிக்கல் பவுண்டேசன், சட்ட நிறுவனங்கள், தற்பால் சமூகத்தினர், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகைளச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியில் டேவிட் பேர்ஜஸ் இன் பிள்ளைகள் தங்கள் இறுதி அஞ்சலியை அவர்களின் தந்தைக்குச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இக்கட்டுரை சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் உடன் அரசியல் தஞ்ச வழக்குகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அவரின் நண்பர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் வழங்கும் ஒரு அஞ்சலிக் குறிப்பு. கவுன்சிலர் சத்தியநேசன் ஒலிப்பதிவாக வழங்கிய அஞ்லியை ரி சோதிலிங்கம் கணணிப்படுத்தி உள்ளார்.

._._._._._.

‘அப்போது தமிழ் அகதிகள் லண்டனில் பெருமளவு வந்திறங்கிய காலம். தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய பல தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த காலம். தம்மால் ஆன எந்த உதவிகளைச் செய்தும் ஏதும் பலன் இல்லை என்றிருந்த காலம்.’ லண்டன் ஏஞ்சலில் உள்ள JCWIல் பணியாற்றிய Jane Coker இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அப்போது உதவி வந்தவர். அவர், அகதிகள் திருப்பி அனுப்பப்படவதற்கு எதிரான அதாவது தஞ்சம் கோருவோரை மீண்டும் நாட்டுக்கு அனுப்புகின்ற பிரித்தானிய உள்நாட்டு அமைச்சின் கொள்கைகளை எதிர்த்து, உயர்நீதிமன்றில் சட்டப்படி சவால்விடுக்க, டேவிட் பேர்ஜஸ் ஜ TRAG (Tamil Refugee Action Group – Co-Ordinator Mr V Varathakumar) க்கு அறிமுகப்படுத்தினார். இன்று இந்த Jane coker ஒரு பிரித்தானிய நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”1985 காலப்பகுதிகளில் பிரித்தானிய உள்நாட்டமைச்சு இலங்கைத்தமிழ் அகதிகளை உனடியாகவே திருப்பி அனுப்பவதில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரவு, பகல் பாராது அகதிகளை ஏற்றிச்செல்லும் பொலீஸ் வாகனங்களுக்கு பின்னால் கலைத்து திரிந்தும், ஓடித்திரிந்தும் பொலிசார் அகதிகளை ஒளித்து வைத்திருக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று, அவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தும் அந்த அகதிகளை நாடுகடத்த விடாமல் செய்த பணிகளில் டேவிட் பேர்ஜஸ் இன் பணி அளப்பரியது. பொலீசார் டேவிட் பேர்ஜஸ் இவர்களுடைய வழக்குகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், அகதிகளை Holiday Inn போன்ற ஹோட்டல்களில் ஒளித்து வைத்தபோதும் அகதிகளை ஹோட்டல்களின் வாசல்களில் சந்தித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து அந்த அகதிகளை திருப்பி அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியவர் டேவிட் பேர்ஜஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அவர்களுக்கு நன்றிக் கடமை உடையவர்கள்.” என்று TRAG – தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் இணைப்பாளர் திரு வி வரதகுமார் குறிப்பிடுகின்றார்.

1985 காலப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்ற இனக்குரோத நடவடிக்ககைளில் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் தமிழர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவையாற்றியவர் திரு டேவிட் பேர்ஜஸ்.

இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான வன்முறை வடிவம் எடுக்க ஆரம்பித்த காலங்களில் 1985ம் ஆண்டு பிரித்தானியா தனது குடிவரவுச் சட்டத்தில் கொமன்வெல்த் நாடுகளில் இருந்து வருபவர்களில் முதலாவதாக இலங்கையருக்கு விசா முறையை அமுல்ப்படுத்துகின்றனர். இதன்படி விசா இல்லாமல் வரும் அகதிகள் உடனடியாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய பாதிப்புக்களை கொடுத்திருந்தது.

யூலை 11 1986 உள்நாட்டு அமைச்சராக இருந்த டக்ளஸ் ஹேட், இலங்கைத் தமிழர்க்கு Exceptional Leave to Remain தரப்படும் என தெரிவிக்கிறார். இது இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கையில் இனரீதியாக பாதிப்படைந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாது அகதிகளின் தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே அவர்களுக்கு தங்குமிட அனுமதி வழங்குவது என்ற சட்டமாகும். இது தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம் என்று பிரித்தானிய அரச ஏற்கவில்லை என்பதேயாகும்.

1987 ஹீத்துரோ விமான நிலையம் Terminal 3 அல்லது Terminal 4ல் தமிழர்கள் தமது உடுப்புக்களை கழற்றி எறிந்துவிட்டு தம்மை நாடு கடத்த வேண்டாம் எனப் போராட்டம் நடாத்திய நேரம். போராட்டம் நடத்தியவர்களை Ford House Hotelல் தடுத்து வைத்திருந்தனர். Winstanly Burgrs சட்ட நிறுவனம் சட்டத்தரணிகள் டேவிட் பேர்ஜஸ், Chris Landel ஆகிய இருவரும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுக்க முன்வந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல UNHCR அன்றைய உதவி உயர் ஸ்தானிகர் Irin Khan இன்றைய IOM Secretary General இதற்கான பின்புல உதவிகளை செய்ய முன்வந்திருந்தார்.

இந்த வழக்கில் டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்று தமிழர்கள் நாடு கடத்தலை தடுத்து நிறுத்தினார். இந்த வழக்கின் வெற்றியில் இன்று வரையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல பல்வேறுபட்ட நாட்டு அகதிகளும் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இலங்கைத் தமிழ் மக்களால் அகதிகள் சமூகத்திற்கு வழங்கிய பெரிய விடயமாகும்.

1987 கீத்துரோ விமான நிலையத்தில் நாடுகடத்த முற்பட்ட வேளை தம்மை நாடு கடத்த வேண்டாம் என போராட்டம் நடாத்தியவர்களை Ford House Hotel ல் இருந்து தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஆறு எகிப்தியர்களை நாடுகடத்தப்பட இருந்ததும் அவர்களும் இந்த தமிழ் அகதிகளின் நீதிமன்றின் வெற்றியினால் பலன் பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் சனல் 4 இந்த விடயங்களை Black Back Series என்ற தொடரில் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

நீதிமன்றில் பெற்ற வெற்றியின் பின்னர் டேவிட் பேர்ஜஸ் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகத் தான் இலங்கைக்குச் சென்று நிலமைகளை ஆய்வுசெய்து வந்தும், வேறு சில சட்டத்தரணிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்தும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்திருந்தார். பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் முன்னர் எப்போதும் இப்படியான ஒரு சட்டச் சவாலை எதிர்கொள்வில்லை. பிற்காலங்களில் அகதிகளை ஏற்றி வரும் விமான நிறுவனங்களுக்கு 2000 பவுண்ஸ் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இருந்த காலத்திலும், டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பலருக்கு நின்மதி அளித்திருந்தது.

பிரித்தானிய சட்டத்துறைக்கும் பிரித்தானிய அரசுக்கும் அதன் சட்டவாக்க கொள்கை வகுப்புக்களுக்கு டேவிட் பேர்ஜஸ் இன் நீதிமன்ற வெற்றி உதவியது. இது பிரித்தானியாவின் சட்டத்துறையில் மாற்றங்களை உருவாக்கியது. டேவிட் பேர்ஜஸ் ஒவ்வொரு அகதியையும் தனது முழுமையான அர்ப்பணிப்புடனும் உத்தியோக சிறப்புடனும் அணுகினார். அகதிகளிடம் வாக்கு மூலம்பெறுவதற்கும் இலங்கை பற்றி அறிவதற்கும் மிகுந்த நேரத்தைச் செலவிட்டார். டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பின் பயனை தனிப்பட்ட அகதிகள் மட்டுமல்லாமல், அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளும் கூட வெற்றியின் பயனைப்பெற்றனர். இந்தக் காலத்தில் லண்டனில் இருந்த பல தமிழ் சட்டத்தரணிகளில் அனுபவம், சட்டத்தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலரே. பல சட்டத்தரணிகள் தமது தொழில் ரீதியாக தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை டேவிட் பேர்ஜஸ் உருவாக்கி இருந்தார்.
டேவிட் பேர்ஜஸ் உடைய வழக்கு வெற்றியினை ஆதாரமாகக் கொண்டு தமது வழக்குகளை வெல்ல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள், தங்களுக்கு பெரும் பணமீட்டும் உழைப்பாக்கிக் கொண்டனர். அதிலும் சாதாரணமாக உள்ளுராட்சி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கிடைக்கக்கூடிய Exceptional Leave to Reamin ஜ கூட பல நூறு பவுண் பணங்களை வாங்கிக் கொண்டே தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வோர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் அகதிகள் பெருமளவு பிரித்தானியாவுக்கு வந்த காலத்தில் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த British Refuge Council, UKIAS, AI, UNHCR போன்ற பல அமைப்புக்களுக்கும் இந்த டேவிட் பேர்ஜஸ் இன் வெற்றி உதவிக்கரமாக இருந்தது.

மேலும் பல தமிழ்அகதிகள் அமைப்புக்கள் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற்று மேலும் பல அகதிகளுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது. இந்தப் பரீட்சார்த்த வழக்கு வெற்றிகளினால் வேறு பல நாட்டு அகதிகளின் வழக்குகளும் வெற்றி வாகை சூடிக்கொண்டது. பங்களாதேஸில் இருந்த வந்திருந்த அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு டேவிட் பேர்ஜஸ் இனால் கிடைத்த சட்ட வெற்றியைப் பயன்படுத்தி, அடுத்த தொகுதி பங்களாதேஸ் அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க இந்த வழக்கு வெற்றி உதவியது. இன்று பிரித்தானியாவில் தமிழ் சமூகம் வல்லமையும் ஆளுமையும் கொண்ட சமூகமாக இருப்பதற்கு டேவிட் பேர்ஜஸ் செய்த உதவிகள் முக்கியமானவை.

டேவிட் பேர்ஜஸ் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது சேவையினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். டேவிட் பேர்ஜஸ் தமிழ் மக்களுக்கும் ஏனைய அகதி மக்களுக்கும் ஒரு பாதுகாக்கும் கரமாக இருந்துள்ளார். இன்று பிரித்தானியாவில் தமிழர்களும் மற்றைய நாட்டவர்களும் அகதிகளாக வந்து பயனை அடைந்திட டேவிட் பேர்ஜஸ் ன் பங்களிப்பு அளப்பரியது.

பாதிக்கப்பட்ட இனமான தமிழ் இனம் சர்வதேச அகதிகளுக்கான மனித உரிமைகளுக்கான சட்டங்களான 1951 Convetion, 1967 Protocol ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு தரப்படவில்லையானாலும் பிரித்தானிய சட்டதிட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி தமக்கான சட்டப் பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்கள் பெற்றுள்ளனர். டேவிட் பேர்ஜஸ் பணத்தையும் பெருமையயும் முதன்மைப்படுத்தாமல் பிரித்தானிய உள்நாட்டு சட்டத்துக்கு சவாலாகவும் பாதிக்கப்பட்ட இனத்திற்காக உதவி செய்வதையும் முதன்மைப்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதனுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

டேவிட் பேர்ஜஸ் தொடர்பான முன்னைய பதிவுகள்:

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

 • சாந்தன்
  சாந்தன்

  சட்டத்தரணி மனித உரிமைக் காவலன் டேவிட் பேஜசுக்கு எனது உளமார்ந்த வணக்கங்களும் நன்றிகலந்த அஞ்சலிகளும்.

  இம்மரணச்சடங்கிலும் அஞ்சலி நிகழ்விலும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கனக்கில் கலந்துகொண்டிருப்பர் என எதிர்பார்க்கிறேன். ஆனாலும் எமது ஈழத்தமிழரின் நன்றிமறத்தல் என்கின்ற குணத்தை நினைத்து பயமும் அடைவது தவிர்க்க முடியாததாகிறது.

  இந்தியாவின் மூன்றாம்தர குப்பை சினிமாவுக்கு லண்டன் குளிரில் வரிசையில் நிற்கும் கூட்டத்திலும் குறவானதாகவே அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருப்பார்கள் என செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை.

  ஆனாலும் ஈழத்தமிழ் அகதிகளின் நன்றிகளை அஞ்சலி நிகழ்வில் பதிவு செய்த போல் சத்தியநேசனுக்கு நன்றி!

  Reply
 • London Boy
  London Boy

  சட்டத்தரணியின் சேவையை மதிக்கின்றேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவருடைய இறுதி நிகழ்வில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குக் கூட தமிழர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது வேதனையான உண்மை.

  வி வரதகுமார் ராஜேஸ் பாலா இன்னும் ஓரிருவரே கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது. அவரின் சேவையால் நன்மைபெற்ற ஆயிரக்கணக்கான தமிழர்கள் லண்டனில் வாழ்கின்றனர். எங்களுடைய இந்த இயல்பு மாற வேண்டும். நல்ல ஆத்மாக்களைக் கெளரவிக்க வேண்டும்.

  போல் சத்திய நேசனின் அஞ்சலி முக்கியமானது. அதனை கணணிப்படுத்திய தேசம்நெற் சோதிலிங்கத்திற்கு நன்றிகள்.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  சிறப்பு மனிதன் டேவிட் பேர்ஜஸ். இன்று லண்டனில் நான் உட்பட பலர் பெற்றுள்ள அகதி அங்கீகாரம் தொடக்கம் இன்றைய எமது வாழ்வுக்கு அடித்தளமாக இருந்த மனிதனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

  இவர் போன்ற சிறப்பு மனிதர்களாலே மனிதர்கள் சிறப்பாக வாழ்கின்றனர்!!

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  இந்த மனித நேய பணியாளருக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

  தமிழர்கள் தமது இனத்துக்கு உதவுவோரை மதிப்பதை விட , உபத்திரவம் கொடுப்போர் பின்னால் திரழும் ஒரு இனம். ஒரு மனிதனது பலவீனங்கள் எதுவானாலும் , அவர் செய்த நன்மைகளையோ , சேவைகளையே மறக்கலாகாது.

  அன்பர் போல் சத்தியசீலன் அவர்களுக்கும், நண்பன் ரி சோதிலிங்கம் பதிவுக்கும் நன்றி.

  Reply