தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு ஒக்ரோபர் 23ல் லண்டனில் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தின் ஹரோ கம்பஸில் இடம்பெற்றது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ( லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன் ) இந்த மாநாடு இரு அமர்வுகளாக ஒன்றில் பிரச்சினையான விடங்களையும் இரண்டாவதில் ஊடகக் கொள்ளளவு பற்றியும் ஆராய்ந்தது.
இந்த மாநாடு துரதிஸ்டமாக உலகத் தமிழ் சமூகத்தை பல்வகைப்பட்ட மக்கள் குழு என்று கூறிய போதும் இதில் உள்ள இருபெரும் பிரிவு இந்திய – இலங்கை தமிழ் சமூகங்கள் என்ற அளவிலே மட்டுமே பார்க்கப்பட்டது. தமிழ் மக்களுக்குள் உள்ள பன்முகத்தன்மையை புரிந்துகொள்வதில் இருந்து இந்த மாநாடு வெகுதொலைவிலேயே இருந்தது. அதனால் பிரச்சினையான விடயங்கள் என்று ஆராயப்பட்ட ‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற அம்சங்கள் வெறுமனே சர்வதேச ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதன் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டது.
இப்பார்வையானது இம்மாநாட்டின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைத்தவறு. தமிழ் சமூகம் பன்மைத்துவ சமூகம் என்பதனையோ ஏனைய சமூகங்கள் போன்று தமிழ் சமூகமும் பன்மைத்துவமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது என்பது பற்றியோ இம்மாநாடு கவனம் செலுத்தத் தவறியது. ‘யூரொப்’ ஆசிரியர் மயூரன் மட்டுமே இவ்விடயத்தைத் தொட்டுச் சென்றிருந்தார். ஆனாலும் ரமேஸ் சுட்டிக்காட்டியது போல் ‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ உண்மைகளை வெளிப்படுத்துவது கடினமானதாகவே இருந்தது. இலங்கைத் தமிழ் சமூகத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்ட சமூகமாகவும் எது எதிர்கொள்கின்ற பிரச்சினையும் ஒற்றைப்பரிமாணம் கொண்டது என்ற வகையிலுமேயே இந்த மாநாடு பிரச்சினைகளை அணுகியது.
வி தேவராஜா, வினோதினி கணபதிப்பிள்ளை, ஆனந்தி சூரியப்பிரகாசம், அருள்எழிலன் ஆகியோரின் பேச்சுக்கள் மே 18 2009யை நோக்கி தமிழ் மக்களை வழிநடத்திய அதே கருத்தியல் – புலியியல் அம்சங்களின் பாதிப்பில் இருந்து இன்னமும் விடுபட்டு இருக்கவில்லை என்பதனையே காட்டியது. வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த இந்த ஊடகங்கள் அது பற்றிய எவ்வித மீளாய்வும் இன்றி சர்வதேச ஊடகங்கள் தமிழ் மக்களைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்களை வைத்தன. தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேலிக் கூத்தாகி ஊடகத்தின் அடிப்படை விதிகளையே கைவிட்டு வெறும் பொய் பிரச்சார ஊடகங்களாக ஆன பின்னர் வினோதினி கணபதிப்பிள்ளை தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மையைப் புகழ்ந்து கொண்டார். மயூரனின் சேரனனின் மேலோட்டமான மிக மென்மையான விமர்சனங்களைக் கூட வினோதினி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே காணப்பட்டார்.
இம்மாநாட்டில் தமிழ் ஊடகங்கள் என்று பொதுப்படையாகப் பேசப்பட்டாலும் இம்மாநாடு முற்றிலும் புலியியலுக்கு ஆதரவான ஊடகங்களின் மாநாடே. இங்கு தமிழ் ஊடகங்கள் எனும் போது புலி ஆதரவு ஊடகங்களையே அது குறித்து நின்றது. மேலும் இம்மாநாட்டு அமைப்பாளர்களாக பேச்சாளராக கலந்துகொண்டவர்களில் அம்ரித் லால், ஹீதர் பிளேக், ரமேஸ் கோபாலகிருஸ்ணன் தவிர்ந்த அனைவருமே வேறு வேறு காரணங்களுக்காக புலியியல் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருந்தனர். இவர்களில் அருள்எழிலன் ஒருபடி மேலே சென்று, ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறையவே இருக்கின்றது. நான் (புலிகளைத் தவிர) யாருக்கும் விலை போக மாட்டேன்’ என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
புலியியல் கருத்தியல் மீதோ அதனை மணம் முடித்த ஊடகங்கள் பற்றியோ காத்திரமான விமர்சனமோ மதிப்பீடோ மேற்கொள்ளப்படாமலேயே இம்மாநாடும் முடிவடைந்தது. 2008ல் இடம்பெற்ற மாநாடும் எவ்விதமான சாதகமான பாதிப்பையும் அந்த ஊடகங்களில் ஏற்படுத்தவில்லை. மாறாக எதிர்மறைவிளைவையே அது ஏற்படுத்தியது. தமிழ் தேசியத்தின் பெயரால் உண்மையை மறைக்கவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் இந்த ஊடகங்கள் முன்நின்றன. மே 18 2009 விளைவுகளுக்கு இந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவற்றில் இருந்து எவ்வித படிப்பினைகளும் இன்றி 2010 மாநாடு நடந்து முடிந்துள்ளது. மீண்டும் தமிழ் தேசியத்தின் பெயரால் ஒரு குடையின் கீழ் அணிசேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இந்த மாநாட்டின் பெரும்பாலான பேச்சாளர்களும் மட்டுமல்ல இதில் கலந்து கொண்டவர்களுமே ஒற்றைப்பரிமாண புலியியல் அரசியலைக் கொண்டவர்களே. சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் மாநாடும் ஒரு பேப்பர், தமிழ் கார்டியன், ஜரிவி என்பனவற்றைச் சுற்றியே இருந்தது. 2008ல் ரிரிஎன் இருந்த இடத்தை தற்போது ஜீரிவி மாற்றீடு செய்ததைத் தவிர குறிப்பிடப்படும் படியான மாற்றங்கள் இருக்கவில்லை.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாசிப்போர், கேட்போர், பார்ப்போர் அவற்றில் வந்து கருத்துச் சொல்வோர், தேவாரம், கவிதை பாடுவோர் எல்லோரும் ஊடகவியலாளர் என்றால் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகவியலாளர்கள். ஆனால் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ சுயாதீனமாகவோ ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் கலந்துகொண்ட 100 வரையானவர்களில் 10 வீதமானவர்கள் கூட ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். கலந்துகொண்டவர்களில் ஊடகவியலாளர்களிலும் பார்க்க நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அத்தேர்தலில் போட்டியிட்டவர்களும் அதிகம். தேசம்நெற், லண்டன் குரல் ஆசிரியர் குழுவில் இருந்து த ஜெயபாலனும் ரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ் உம் மட்டுமே இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றுக் கருத்துடைய தளத்தில் இருந்து பங்குபற்றி இருந்தனர். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்றும் அதன் மாநாடு என்றும் ஏற்பாடு செய்யப்படும் போது லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற பிபிசி தமிழோசை, தீபம் தொலைக்காட்சி, சண்றைஸ் வானொலி, காலைக்கதிர், புதினம் போன்ற ஊடகங்களின் ஊடகவியலாளர்களே கலந்துகொள்ளவில்லை. இம்மாநாட்டில் இருந்த பல்வேறு பலவீனங்களில் இதுவும் முக்கியமான பலவீனமாகும்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் பெயருக்கேற்ற சர்வதேச தமிழ் ஊடகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களினதும் ஊடகங்களினதும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கவில்லை. இதே போக்கில் மற்றுமொரு மாநாட்டை 2011ல் நிகழ்த்துவது அர்த்தமற்றது. coperate நிறுவனங்களின் பிடியில் உள்ள ஊடகங்களை விடுவிக்க றடிக்கல் லிபரல் டெமொகிரசியைக் உருவாக்கக் கேட்கும் சேரன் புலி ஆதரவுப் பிடியில் இருக்கும் இந்த தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தை விடுவித்து தமிழ் ஊடகங்களின் பன்முகத்தன்மைக்கு வழிவிட முயற்சிப்பது யதார்த்தமானதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்கும்.
தமிழ் ஊடகங்கள் பல்வேறு விடயங்களில் குறைநிலையில் இருப்பதை சரியாகவே இனம் கண்ட சேரன் தான் வழங்கிய நீண்ட presentationல் குறைந்தபட்ச தொழில்நுட்பத்தைக் கூடப் பயன்படுத்தவில்லை. குறைந்தபட்சம் தனது உரையை கணணிப்படுத்தி அதன் பிரதிகளைக் கூட வழங்கவில்லை. இது சேரனின் தவறு மட்டுமல்ல இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களதும் தவறு. 10க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் வழங்கிய அத்தனை பேச்சுக்களையும் பார்வையாளர்கள் முழுமையாகக் கிரகித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களுடைய உரைகளை முன்னதாகவே பெற்று அவற்றினை நூலாகவோ அல்லது பிரதிஎடுத்தோ பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எவ்வித செலவும் இன்றி மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தங்கள் இணையத்திலோ பிரசுரித்து இருக்கலாம். கடந்த மாநாட்டிலும் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இம்மாநாட்டிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஏற்பாட்டாளர்கள் இது பற்றிக் கூடியகவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இவ்வாறான ஊடக அமைப்பு ஒன்று அவசியமானது. அதற்கான முன்முயற்சியை எடுத்துக் கொண்டமைக்காக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் முன் பலதடைகள் உள்ளது. அதனைத் தாண்டுவதற்கு இளமைத் துடிப்பும் புதிய சிந்தனையும் உத்வேகமும் உடைய மயூரன் விவேகானந்தன் போன்ற இளம்தலைமுறை ஊடகவியலாளர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும். இம்மாநாட்டில் ஊடகவியலாளர்கள் தங்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எவ்வாறான முரண்பாடுகள் இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் தங்களை இவ்வமைப்புடன் இணைத்துக் கொள்வதும் இவ்வமைப்பு ஜனநாயக அடிப்படையில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதும் தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையும் கூட.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2010 மாநாடு
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளர் கோபி ரட்ணத்தின் வரவேற்புரையுடன் மாநாடு ஆரம்பமானது. இரு அமர்வுகளாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற விடயங்கள் முதல் அமர்வில் ஆராயப்பட்டது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழ் தேசியப் பிரச்சினையும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவாலும்’ என்ற தலைப்பில் வி தேவராஜா உரையாற்றினார். றோஹித பாசன அபயவர்த்தன மாநாட்டில் தொலைத் தொடர்பு மூலமாக கருத்துக்களை முன் வைத்தார். ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகையின் இலங்கைப் பிரிவுக்கான பொறுப்பாளர் அம்ரித் லால் ஆகியோர் இவ்வமர்வில் உரையாற்றினர். (நிகழ்வுக்கு காலதாமதமாகிச் சென்றதால் இவர்களின் உரைபற்றிய குறிப்பை எடுக்கவில்லை.)
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு:
எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் சார்பில் ஹீத்தர் பிளேக், ‘இலங்கையில் வன்முறைகள் குறைந்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் தரவரிசையில் இலங்கை முன்னேறி இருக்கின்றது. ஆனாலும் வழமையான சூழலில் இருந்து இலங்கை வெகு தொலைவில் இருக்கின்றது’ எனத் தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த இலங்கை பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்:
1. காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்
2. 2000 ஆண்டு முதல் 25 ஊடகவியலாளர்கள் வரை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. ஊடகவியலாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாவது நிறுத்தப்பட வேண்டும்.
4. ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
5. ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கின்ற சட்டவிதிகள் நீக்கப்பட வேண்டும்.
6. ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
ரமேஸ் கோபாலகிருஸ்ணன்:
முன்னாள் பிபிசி ஊடகவியலாளரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவுக்குப் பொறுப்பானவருமான ரமேஸ் கோபாலகிருஸ்ணன் ‘மாறுபட்ட கூறுகளின் சேர்க்கை உங்களுடைய உலகங்கள் – ‘ என்ற தலைபில் உரையாற்றினார். ‘நான் உங்களுடைய தலைவர்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டவன். நான் சென்னையில் ஊடகவியலாளராக இருந்த போது நேர்கண்டவர்கள் பலர் இப்போது இல்லை. எல்லாம் மைனஸாகிக் கொண்டு வருகின்றது’ என்றார் ரமேஸ்.
‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ் ‘உண்மைகள் ஒழிந்திருக்கின்றது. அதனைச் சொல்வது கடினமாக உள்ளது’ எனத் தெரிவித்தார். ‘இன்றைய உலகில் தமிழர்களுக்கு நண்பர்கள் எவரும் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் தனக்கு நடந்து முடிந்த யுத்தம் தொடர்பாக இலங்கை அரசு மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்கள் உண்டென்பதை அங்கு வெளிப்படுத்தினார்.
தமிழ் ஊடகங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் எப்போதுமே செய்திகளை சூடாகவே வழங்கிப் பழக்கப்பட்டு உள்ளது என்றும் இதமாக செய்திகள் வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகளின் உள்ளடக்கம் சூடானதாகவே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதனால் செய்திகள் பற்றிய உள்ளடக்க மதிப்பீடு குறைந்ததாகவே காணப்படுவதாகவும் கூறினார்.
இந்திய ஊடகங்களின் போக்கை ஆராய்ந்த ரமேஸ் இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சினை பற்றி மட்டுமல்ல காஸ்மீர் பிரச்சினையிலும் மேம்போக்கான ஒரு நிலையையே கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது 2 மில்லயன் மக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட ரமேஸ் இந்திய அரசியல் அமைப்பில் இந்தியா பிறந்து சொல்லப்பட்டு உள்ளது ஆனால் எவ்வாறு பிறந்தது என்பதும் அதன் வலியும் சொல்லப்படவில்லை என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘இந்திய அரசியல் அமைப்பு வரலாற்றை மறந்துவிட்டது’ எனத் தெரிவித்தார். தமிழ், காஸ்மீர் வரலாறுகளும் அவ்வாறே ஆகும் என்பதை அவர் உணர்த்திச் சென்றார்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரமேஸ் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்து இருப்பதையும் இந்திய முதலாளிகள் பாரிய முதலீடுகளைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். தற்போது இலங்கையின் பெற்றோலியச் சந்தையை நடாத்துகின்றவை இந்திய நிறுவனங்களே என்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ், இந்தியாவால் பங்களாதேஸ் இலங்கை போன்ற நாடுகளையே வாங்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களும் தமிழ் தலைநகரத்தில் இருப்பதாகக் கருதுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இவர்கள் உல்லாசப் பயணமாக இலங்கை செல்வதையும் குறிப்பிட்டார். முதலீடுகள் தேசிய எல்லைகளை மீறி பரந்து விரிவதை அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
‘உணர்நிலை – புதுமைகள் – கொள்ளளவு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இரண்டாவது அமர்விற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவரும் ஜிரிவி நிகழ்ச்சி வழங்கனருமான தினேஸ் குமார் தலைமை தாங்கினார்.
மயூரன் விவேகானந்தன்:
‘ஊடக வெளியை விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் மயூரன் விவேகானந்தன் தனது ஊடக அனுபவங்களினூடாக விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். நோர்வேயில் இருந்து வெளியாகும் பல்கலாச்சார இதழான ‘யூரொறப்’ இன் ஆசிரியரான இவர் தமிழ் ஊடகத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளியிட்டார். ‘தமிழில் எழுதுபவர்கள் மட்டுமல்ல தமிழ் தவிர்ந்த மொழிகளில் எழுதபவர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே’ என்றும் நோர்வேஜிய மொழியில் எழுதும் தானும் ஒரு தமிழ் ஊடகவியலாளனே எனத் தெரிவித்தார். இளம்தலைமுறை எழுத்தாளரான இவர் தனக்கான புளொக் ஒன்றை ஆரம்பித்து எழுதத் தொடங்கி, தற்போது ‘யூரொப்’ இதழின் ஆசிரியராக வளர்ந்துள்ளார். ஏனைய நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களும் தங்கள் நாடுகளில் உள்ள ஊடகங்களில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தங்கள் ஊடகத்தில் அரிதாகவே இலங்கைப் பிரச்சினைகள் பற்றி எழுதுவதாகத் தெரிவித்த அவர், தமிழ் ஊடகங்கள் இலங்கைப் பிரச்சினையை எழுதுகையில் பிரச்சாரத் தன்மையுடன் எழுதுவதாகத் தெரிவித்தார். உண்மைகளிலும் பார்க்க பிரச்சாரம் மேலோங்கும் போது அவை தரமற்றுப் போவதை மயூரன் சுட்டிக்காட்டினார். சார்பு நிலையற்று உண்மைகளை வெளிப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மயூரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தமிழ் ஊடகங்களில் இந்த அரங்கிலும் கூட பெண்களின் பங்குபற்றுதல் மிகக் குறைவாகவே காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய மயூரன் சர்வதேச செய்தியாளர் ஒன்றியம் போன்ற ஊடக அமைப்புகளிலும் பெண்களின் பங்குபற்றுதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பை தங்கள் ஊடகமே முன்னின்று மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் செயற்பாடுகள் ஊடகங்களுக்கு அவசியம் என்றார்.
மேலும் தமிழ் ஊடகங்கள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்தாலும் அவை எப்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் பற்றிய செய்திகளை மட்டுமே தாங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தங்கள் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளைக் கவனிப்பதில்லை எனத் தெரிவித்தார். தாயகச் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சமூகப் பிரச்சினை தொடர்பான செய்திகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் சேரன்:
‘உலகமயமாக்கல் காலத்தில் ஜனநாயகம், தொழில்நுட்பம், மாற்று ஊடகம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சேரன் உரையாற்றினார். உலகமயமாக்கலில் ஊடகங்கள் பெரும் ஸ்தாபனங்களினால் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும், அவையே தீர்மானிக்கின்ற சக்தியாக அமைவதையும் சேரன் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பத்தின் விளைவாக உருவான இணையங்களும் ஏனைய தொழில்நுட்ப அம்சங்களும் கூட பெரும் ஸ்தாபனங்ககளின் நோக்கங்களுக்கே சேவகம் செய்வதாக சேரன் குற்றம்சாட்டினார்.
தற்போதுள்ள லிபரல் ஜனநாயகம், தனிமனித உரிமைகள், மேற்கின் நடைமுறை என்பன உண்மையான ஜனநாயகத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கூறிய சேரன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மனித உரிமைகளுடன் சமரசம் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் இருந்து விடுபடுவதற்கு புதிய மாற்றத்துடனான லிபிரல் ஜனநாயகத்தின் அவசியத்தை சேரன் வலியுறுத்தினார். இவ்வாறான ஒரு ஜனநாயகப் பண்பே உண்மையான சுதந்திரம், சமத்துவம் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மாற்றுக் கருத்து, மேலாதிக்கம் அற்ற நிலை, தொடர்பாடல் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்தும் என சேரன் குறிப்பிட்டார்.
தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கம், வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களிலும் குறைபாடுடையவையாக இருப்பதாகவும் சார்பு நிலையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ் ஊடகங்களிலும் செய்தியைப் பார்க முன் மரண அறிவித்தல் விளம்பரத்தைப் பார்த்த பின்னரே செய்திக்குள் செல்லும் நிலை இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக வீரகேசரி பத்திரிகையை உதாரணத்திற்கு எடுத்த அவர் செய்தி ஆசிரியர்களை விளம்பரப் பகுதியினர் மேலாண்மை செய்வதையும் சுட்டிக்காட்டினார்.
வினோதினி கணபதிப்பிள்ளை
‘தகவலும் பரப்பலும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோதினி கணபதிப்பிள்ளை பெரும்பாலும் மயூரன், சேரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டார். மிகவும் அரசியல் மயப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்கும் ஊடகங்கள் காத்திரமான முறையிலேயே செயற்பட்டு வருவதாகவும் முன்னேற்றத்திற்கான இடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களுடைய போராட்டத்தைப் பொறுத்தவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருந்ததாகத் தெரிவித்த வினோதினி ஆனால் உண்மைகள் எப்போதும் சமரசம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் தகவல் – செய்தித் தேடலுக்கு ஒரு ஊடகத்தில் மட்டும் தங்கி இருப்பதில்லை எனத் தெரிவித்த வினோதினி, அவர்கள் ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிட்டே செய்திகைள உறுதிப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். அதனால் தமிழ் ஊடகங்கள் தங்கள் உண்மைத் தன்மையைப் பேண வேண்டிய கட்டாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழபேசத் தெரியாத தமிழர்கள் மீது தமிழ் சமூகத்திடம் ஒரு கீழான பார்வை இருந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வினோதினி தமிழர்களுடைய அடையாளம் வளர்ந்து வருவதாகவும் முன்னர் தமிழ்பேசத் தெரியாதவர்கள் மீது இருந்த அவ்வாறான பார்வை, இப்போது இல்லை எனவும் தெரிவித்தார். தமிழர்கள் கட்டாயம் தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை என்றார் வினோதினி.
தோமஸ் அருள்எழிலன்:
‘தமிழர் பிரச்சினையும் ஊடகங்களின் நிலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய குங்கும் சிரேஸ்ட ஆசிரியர் அருள்எழிலன் சபையில் இருந்தவர்களுக்கு, ‘இந்தியா மீது கோபமும் இருக்கு. எதிர்பார்ப்பும் இருக்கு’ என்றார். ‘அரசு ஒரு போதும் போராடும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்காது’ எனக் குறிப்பிட்ட அருள்எழிலன் மாவிலாறு சம்பவத்திற்குப் பின் ஐந்தாறு தடவைகள் தான் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். அப்போது தமிழ்ச்செல்வன் மாவிலாறை சாதாரண ஒரு பிரச்சினையாகவே சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். ‘அந்தப் பிரச்சினையின் ஆழத்தை அறிந்திருக்க வேண்டும் ஆனால் அறிந்திருக்கவில்லை’ என்றார் அருள்எழிலன்.
‘தமிழ் மக்களுடைய பிரச்சினையில் தமிழ் மக்களே முடிவெடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய முழு ஆதரவு இருக்கும்’ எனத் தெரிவித்த அருள்எழிலன், ‘நான் ஒரு போதும் விலை போகமாட்டேன்’ என உறுதி அளித்தார். ‘தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்துடன் செல்வதிலும் பார்க்க விடுதலைப் புலிகளுடன் இருப்பதே சரியானது. வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது’ என்றவர், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்’ எனத் தெரிவித்தார்.
சேந்தன் செல்வராஜா:
‘புதிய ஊடகம்: எல்லைகடந்த தமிழ் அரசியலின் சக்தி’ என்ற தலைப்பில் சேந்தன் செல்வராஜா உரையாற்றினார்.
தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் நடந்தவற்றைப் பற்றி பேசாமல் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கருத்து வெளியிட்டார். இவருடைய பேச்சு நன்றியுரையாக அமைந்த போதும் அருள்எழிலனுக்கு முன்னதாகவே இடம்பெற்றது. சேந்தனின் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
Prof Soman
” … .தீபம் தொலைக்காட்சி, சண்றைஸ் வானொலி, காலைக்கதிர், புதினம் போன்ற ஊடகங்களின் ஊடகவியலாளர்களே கலந்துகொள்ளவில்லை…”
தேவையில்லைத்தானே. ‘அவையும் இவையும்’ ஒண்டுதானே ? அவையள் கலந்துகொண்டிருந்தால் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் ?
மாயா
// ‘தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்துடன் செல்வதிலும் பார்க்க விடுதலைப் புலிகளுடன் இருப்பதே சரியானது. வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது’- அருள்எழிலன் //
இவர் போன்றவர்களால்தான் வன்னி மக்கள் சாகடிக்கப்பட்டனர். அதற்கு தார்மீக பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை நடந்தும் இவர்கள் இன்னும் கண் திறக்காமல் : கிணத்துத் தவளைகளாகவே இருக்கின்றனர் என்பது இவரது கருத்திலிருந்தே தெரிகிறது. இவர்களை ஊடகவியலாளர்கள் என்பதைவிட செரொக்சுக்கு (photo copy) ஒப்பீடு செய்யலாம்.
பெரும்பாலான இந்திய தமிழர்களுக்கு இலங்கையே தெரியாது. ஆனால் இலங்கை குறித்து எழுதுவது தமது ஜீவாதாரத்துக்காக அன்றி வேறெதுவுமில்லை. இணையங்களில் இலங்கையில் நடக்கும் அவதூறுகள் குறித்து இணையங்களில் அல்லது மின்அஞ்சல் வழி அனுப்பப்படும் பெரும்பாலான கற்பனைக் கட்டுரைகள் அனைத்தும் இந்தியர்களின் கைவண்ணமேயாகும். இலங்கையில் எல்லையே தெரியாது எழுதும் கட்டுரைகள். புலிகளில் இருந்தவர்களாலும் இவர்களைப் போல் எழுதவே முடியாது. புலிகளே மெளனமாக இருக்கும் போது ; இவர்கள் தமது ஜீவாதாரத்துக்காக அல்லது சர்வதேச தமிழர்களது நட்பை பெற்று எதையாவது பெற இவற்றை செய்வதே உண்மை.
BC
//அருள்எழிலன் ஒருபடி மேலே சென்று, ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். //
இப்படி கூறியதால் அருள்எழிலனை மகஇக என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மார்க்சிய லெனினிய குரூப் அரவணைத்தது. புலிகளின் கொடுமைகளை கண்டித்ததால் நியயமான இராயகரனிடமிருந்து விலகிக்கொள்கிறோம் என்ற முடிவை மார்க்சிய லெனினிய சிந்தனை அடிப்படையில் தவிர்க்க முடியாமல் எடுத்தது தமிழ்நாட்டை சேர்ந்த மகஇக குரூப். விளங்கி கொள்கிறோம். மார்க்சிய லெனினிய சிந்தனை அடிப்படையே விளங்கி கொள்கிறோம்.
தாமிரா மீனாஷி
அருமையான reporting! பாராட்டுக்கள் ஜெயபாலன்!
குங்குமம் பத்திரிகை முள்ளிவாய்க்கால் காலத்தில் இந்திய அரசின் தலையீட்டை கண்டித்ததா? விலை போனவர்கள் எல்லாம் விலை போகமாட்டேன் என்று வீம்பாகச் சொல்லிக் கொள்வது ஏன்? புலம்பெயர் பணத்தின் மீதான ஆசையா அல்லது அதற்கும் மேலாக எதனாச்சுமா?
சிறிது காலத்திற்கு முன்பு டெல்லியிலிருந்து அனிதா பிரதாப் என்ற பெரும் பத்திரிகையாளர் சாந்தனின் மைத்துனரான கலாநிதி முருகர் குணசிங்கத்தின் புத்தகத்தை வெளியிடுவதற்காக நோர்வேக்கு அழைக்கப் பட்டிருந்தார் ( யாருடைய பணத்தில் என்பது வேறொரு கேள்வி) . அவர் தமிழ் ஈழம் கிடைத்து விட்டது என்று பேசி விட்டு சென்றார்.. இவர்கள் ஏன் அவரை அழைக்கவில்லை? ரேட் அதிகம் கேட்டாரா? அல்லது தகவல் தருவதற்கு அருள் எழிலன் போதும் என்று RAW தீர்மானித்து விட்டதா?
palli
யாருக்கு உருவேத்த எழிலன் உடுக்கடிக்கிறார்;
நானும் சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன், ஜி ரி வியில் டினேஸ் கேப்பதும் இவர் முழங்குவது ஒரே தற்கொலை தாக்குதலாகவே இருந்தது, அதிலும் ஒரு கேள்வி(கேணைதனமாய்) அதுக்கு எழிலன் பதில்கள். இதைவிட எப்படி கடத்துவது எப்படி பணம் பறிப்பது என கேட்டிருக்கலாம், அதைவிட்டு ஈழம் பற்றி யாரிடம் கேப்பது, நாவலனின் கபடத்தனத்துக்கு நன்றி சொல்ல வந்த எழிலனுக்கு புலிகளின் வரவேற்பு மிக அருமை, தமிழகத்தில் நியாயவிலை மதுபோல் இவரது குறைந்த விலை ஈழம் அல்லது அதுக்கான யோசனை எனதான் சொல்ல வேண்டும், எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சபை முன் வைத்து என் கேள்வியால் எழிலனை எப்படியான மனிதன் என புரிய வைத்திருப்பேன், இன்னும் காலம் இருக்கு; ஆடுங்க மேடை(புலிபணம்) உள்ளவரை, போடுவார் தாளம் நாவலன்;
ப்பிரசன்னா
ஜெயபாலனின் இவ் ‘ஊடக முயற்சிக்கு’ – இத் தகவல்களுக்கு – எனது நன்றிகள்…
ப்பிரசன்னா
301010
para
ஜெயபாலனின் ஆரோக்கியமான பார்வை.
நன்றி.
danu
புலம்பெயர்நாடுகளிலிருந்து போராட்டத்தை வழிநடத்தியவர்களின் கொண்டிருந்த விடுதலைப்போராட்டம் பற்றிய அறிவினை இங்கே பிரதி பலித்துள்ளது இதுவும் முள்ளிவாய்க்கால்லுக்கு என்ற பாதைக்கே இட்டுச்செல்லும்.
கடந்த கால போராட்ட தவறகள் பற்றிய எந்த விமர்சனங்களும் அற்று பத்திரிகையாளர் மாநாடா?
indiani
இவ்வளவு காலமும் புலிகள் போராட்டத்தை அழித்தார்கள் மக்களின் வாழ்வை அழித்தார்கள் இப்படியான மாநாட்டாளர்கள் இனிமேல் மக்களின் வாழ்வையும் அழிப்பார்கள்
aathav
அருள் எழிலன் புலிகளை விமர்சனத்துக்கூடாகப் பார்க்கின்றார்!>கண்மூடித்தனமாக அல்ல என்கின்றது. ம.க.இ.க. இவர்களின் “மார்க்சிசப் பார்வை” பட்டவர்த்தனமாக தெரிகின்றது. இவர்களுக்கு இனிமேல் வை.கோ. நெடுமாறன் தமிழ்ஈழ மார்க்கசிசம் சொல்லிக்கொடுப்பார்கள். ரயாகரன் தேவையில்லை! ஏன் “பேராசிரியர்” சேரன் கூட உள்ளாரே! எதிர்கால ம.க.இ.க.-எழிலன்-நாவலனின் தாகம்> “தமிழ்ஈழத் தாயகமே”! பிரதமர் உருத்திரகுமாரனிடம் ஓர் நற்சான்றிதழ் வாங்கினால் போதுமே! தேசிய-சர்வதேசியத-அகிலங்களுக்கு பயன்படும்! மருதையனை நாடுகடந்த தமிழ்ஈழப் பிரச்சாரங்களுக்கு இனிமேல் துணிந்து கூப்பிடலாம்! வாழ்க! வளர்க! இவர்களின் தமிழ் ஈழத்தாயகம்
மாயா
இனி புலத்து தமிழரால்தான் ஈழ மக்களது அழிவு. அதற்கு அடித்தளமாக இந்த மாநாடு நடந்துள்ளதாக கருதலாம்?
T Jeyabalan
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்ட உரைகளின் தொகுப்பை கீழுள்ள இணைப்பில் காணலாம்.
Please find the audio clips of speeches made at the IATAJ’s annual conference at the following URL:
http://www.gopi.net/iataj/conference/2010/speeches
cheers
Gopi
நன்றி கோபிரட்ணம்.
facebook
முகப் புத்தகம், சோபாசக்தி
தமிழகத்துப் பத்திரிகையாளர் டி.அருள்எழிலன் 23.10.2010 அன்று லண்டனில் நடைபெற்ற புலிகள் ஆதரவு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு உரை நிகழ்த்திய போது “வன்னி யுத்தத்தின் போது மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோரியது அநீதி” எனவும் சொல்லியிருந்தார். இது குறித்து நான் எனது முகப் புத்தகத்தில் (Face Book) எழுதிய காட்டமான சொற்கள் பல்வேறு விவாதங்களை முகப் புத்தகக் குழுமத்தில் உருவாக்கின. எனது முகப் புத்தகத்தில் நான் அருள் எழிலன் குறித்து வைத்த விமர்சனங்களைத் தொகுத்தும் சற்று விரிவாகவும் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
முதலில் அருள்எழிலனை அறியாதவர்களிற்காக ஒரு சிறிய அறிமுகம்: அருள்எழிலன் ‘குங்குமம்’ வார இதழ் மற்றும் ‘இனியொரு’ இணையத்தளம் ஆகியவற்றின் ஆசிரியர்களில் ஒருவர். ஈழப் போராட்டம் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற நூலையும் கணிசமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அரசியல், இலக்கியம், சினிமா எனப் பல்வேறு தளங்களிலும் எழுதி வருபவர்.
[அருள்எழிலன்] அருள்எழிலனின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அவரது எழுத்துகள் மீதான ஒரு குறுக்குவெட்டுப் பார்வை தோழர்களிற்கு உதவலாம் என நினைக்கிறேன். அருள்எழிலனின் 232 பக்கங்கள் கொண்ட ‘பேரினவாதத்தின் ராஜா’ நூல் கடுமையான உழைப்புடன் எழுதப்பட்டிருக்கிறது. எனினும் அருள் எழிலனின் தவறான எடுகோள்களும் தவறான அரசியற் பார்வைகளும் அவரின் கடுமையான உழைப்பைப் பயனற்றதாக்கிவிட்டது வருத்தமே. எடுத்துக்காட்டாகச் சில புள்ளிகளை அவருடைய நூலிலிருந்து பார்த்துவிடலாம்.
1.”ஆல்பிரட் துரையப்பாவை ஏன் அழித்தொழிக்க வேண்டும்? அவர் நான்காவது உலகத் தமிழரராய்ச்சி மாநாட்டின்போது போலிஸை வைத்து ஆறு தமிழ் அறிஞர்களைச் சுட்டுக்கொன்றார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு” (பக்:32). – இது வரலாற்றுப் பிழை.
2.”வன்னிக்குள் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கை இராணுவம் நுழைந்ததில்லை. முப்பதாண்டுகளில் இராணுவத்திற்கு நேரடியாக முகம் கொடுக்காதவர்கள் வன்னி மக்கள் (பக்: 126). – இது களப் பிழை.
3.”ஈ.பி.ஆர்.எல்.எவ். என்னும் அரசியற் கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்” (பக்: 87). – இது அரசியற் பிழை.
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அலங்கார ஊர்த்திப் பவனியில் வந்த ஊர்தியொன்றில் கட்டப்பட்டிருந்த உலோகத்தாலான கொடிக் கம்பம் மின்சாரக் கம்பியைத் தொட்டதால் ஊர்தியில் வந்த இருவர் முதலில் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். தொடர்ந்து மக்களிடையே பொலிசார் நடத்திய தாக்குதலில் ஏழு பொதுமக்கள் மாண்டார்கள். இந்தக் கொடூரத்திற்கு நேரடிச் சாட்சியாக நின்ற நமது மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் இது குறித்துத் துயரம் தோய்ந்த வார்த்தைகளால் (’ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு’ – பக்:304) சாட்சியமளித்துள்ளார்.
தமிழறிஞர்களோ, பொதுமக்களோ கொலை கொலைதான். ஆனால் இந்தக் கொலைகளை துரையப்பாதான் செய்ய வைத்தார் என்ற அருள்எழிலனின் எடுகோள்தான் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் என்பதும் தமிழரசுக் கட்சிக்குக் கடும் போட்டியாளராகத் திகழ்ந்தார் என்பதுவுமே துரையப்பா கொல்லப்படுவதற்கான காரணம். அரசியல் முரண்களைத் துப்பாக்கியால் தீர்த்துக்கொள்வது என்ற பாஸிசக் கலாசாரத்தின் விதை துரையப்பாவின் கொலையில்தான் விழுந்தது. துரையப்பா கொலையாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னமே / தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளரும் நல்லூர் கிராமசபைத் தவைருமான வி.குமாரகுலசிங்கத்தின் மீதும் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ. தியாகராஜா மீதும் போராளிகளால் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளால்தான் துரையப்பா அழித்தொழிக்கப்பட்டார் என்ற எழிலனின் எடுகோள் சரியற்றது. இங்கே துரையப்பா “கொலை” எனச் சொல்லாமல் துரையப்பா “அழித்தொழிப்பு” என எழிலன் சொல்வதின் பின்னாலிருப்பது துரையப்பாவின் கொலையை நியாயப்படுத்தும் அரசியல் என்றே கருதுவேன்.
தவிரவும் இந்த ‘ஆறு தமிழறிஞர்கள் கொலை’ என்ற வதந்தியை எழிலன் எங்கிருந்து கண்டுபிடித்தார் எனத் தெரியவில்லை. துரையப்பா கொலை குறித்துப் பல்வேறு வதந்திகளைக் கேட்டு ஈழ மக்கள் பழக்கப்பட்டவர்கள்தான் என்றாலும் இவ்வாறான ஒரு வதந்தியை அவர்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இது வதந்திகளின் ராஜாவாகவல்லவா இருக்கிறது. ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வதைக்காட்டிலும் ஆறு தமிழறிஞர்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்வது அதிகமாகத் தமிழுணர்வைத் தட்டி எழுப்பக் கூடியது என வதந்தியை உருவாக்கியவர்கள் கருதியிருக்கலாம்.
‘முப்பது வருடங்களாகவே வன்னிக்குள் இலங்கை இராணுவம் நுழையவில்லை’ எனத் தனது நூலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எழிலன் குறிப்பிட்டிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. கடந்த முப்பது வருடங்களாக வன்னியில் இராணுவம் நடத்திய மனிதப் படுகொலைகளை அவர் அறிந்திருக்கவில்லை என்பதை விட புலிகள் நடத்திய மாங்குளம் இராணுவ முகாம் தாக்குதல், முல்லைத்தீவு முகாம் தாக்குதல் போன்ற பாரிய தாக்குதல்களைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது கொஞ்சம் வியப்பானதுதான். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில்கூட மாங்குளத்தில் இலங்கை இராணுவம் குண்டு வீசுவதாகக் காட்டியிருந்தார்கள்.
‘ EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட்சக் கொலை இலக்காகவே இருந்தார். இதிகாசப் பெருமாளுக்காவாது 14 வருட அஞ்ஞாதவாசம். இந்தப் பெருமாள் 15 வருடங்கள் அஞ்ஞாதவாசமிருக்க நேரிட்டது. வரதராஜப் பெருமாளை வெறுமனே இந்தியாவால் உருவாக்கப்பட்ட பொம்மையெனச் சித்திரிப்பது புலிகளின் ஆதரவு நோக்கே தவிர தமிழ் மக்களின் நலன் சார்ந்த நோக்குக் கிடையாது.
இலங்கை – இந்திய உடன்படிக்கை இந்திய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். எனினும் இந்திய – இலங்கை உடன்படிக்கையை நிராகரித்ததாலும் யுத்தம் செய்ததாலும் நாம் பெற்றது என்ன, இழந்தது என்ன? சிறு துரும்பைக் கூட நாம் பெற்றுக்கொள்வில்லை. ஆனால் எல்லாவற்றையுமே நாம் இழக்க நேரிட்டது. “ஆனால் மானத்தை இழக்கவில்லையே” என இந்தக் கட்டுரையை மேற்கு நாடொன்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் ஒருவர் மீசையை முறுக்கியபடியே முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. கவரிமான்களோடு எனக்குப் பேச்சில்லை. நான் இரத்தமும் ஆன்மாவும் உள்ள மனிதர்களிடமே பேச விரும்பகிறேன்.
பல தசாப்த இனப் பிரச்சினையை, அதன் சிக்கலான பரிமாணங்களை, ஏற்ற இறக்கங்களை, விட்டுக்கொடுத்தல்களை, பேரங்களை, சமரசங்களைப் புரிந்துகொள்ள முயலாமல் ‘துரோகி’, ‘கைக்கூலி’, ‘உருவாக்கப்பட்ட பொம்மை’ போன்ற முத்திரை குத்தல்களால் பிரச்சினையை எழிலன் எதிர்கொள்வது நியாயமற்றது.
ஈழப் போராட்டத்தைத் தமிழகத்திலிருந்து ஆய்வு செய்து எழுதும் ஒருவரிடம் இத்தகைய வழுக்கள் இருப்பதையும் கள அறிவில் போதாமைகள் இருப்பதையும் புரிந்துகொள்ளக் கூடியதாயிருப்பினும் இந்த வழுக்களிலிருந்து அவர் தனது அரசியல் நிலைப்பாட்டைக் கட்டமைப்பதும் அந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து பேசிவருவதும்தான் துன்பமானது. எழிலனின் நூல் துரோகிகள் x மாவீரர்கள் என்ற தர்க்கத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவர் புலிகளிடமிருந்து அல்லாமல் பெரும்பாலும் ‘துரோகி’களிடமே தேடிக்கொண்டிருக்கிறார். புலிகளின் ஒவ்வொரு செயலும் ‘துரோகி’களை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்படுகிறது. மாத்தையா கொலை உட்பட.
இந்த ‘துரோகிகள் x மாவீரர்கள்’ அரசியலை நம்மிடையேயிருந்து அகற்றாமல் தமிழ் மக்களிற்கு விடிவு கிடையாது. அரசியல் வேறுபாடுகளை எதிர்கொள்ள ‘துரோகி’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட புலிகளின் கொலை அரசியலுக்குப் புலிகளின் அழிவுடனாவது நாம் முடிவுகட்ட வேண்டும். அந்தக் கொலை அரசியலைத் தூக்கி நிறுத்தும் எவரையும் நாம் பொறுத்துக்கொள்ள முடியாது. சுந்தரம், சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ராஜினி திரணகம, கோவிந்தன், செல்வி, கேதிஸ் என நாம் கொடுத்த ஆயிரக்கணக்கான பலிகள் போதும். இப்போது அருள்எழிலனுடன் ‘இனியொரு’ ஆசிரியர் குழுவில் பங்களிக்கும்
அசோக் யோகன் (PLOTEன் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர் – ENDLFன் நிறுவனர்களில் ஒருவர்) சபா. நாவலன் ( முன்னாள் TELO உறுப்பினர்) ஆகிய இருவரும் கூடப் புலிகளின் பார்வையிலே ‘துரோகிகள்’ என்பதும் அவர்கள் புலிகளுக்கு அஞ்சியே புலம் பெயர்ந்து வந்தார்கள் என்பதும் கூட அருள்எழிலனுக்கு உறைக்காமலிருக்கிறதே.
இப்போது எழிலனின் கட்டுரைகளுக்கு வருவோம். இந்திய அகதி முகாம்களிலுள்ள ஈழத்து அகதிகளின் துயரநிலை குறித்தெல்லாம் மிக முக்கியமான கட்டுரைகளை எழுதியவர் எழிலன். ஆனால் அவர் ஈழப் போராட்டத்தின் துரோகிகளைத் துப்பறிகிறேன், உளவாளிகளை உரித்துவிடுகிறேன் என்றரீதியல் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகள்தான் வெறும் அவதூறுக் கட்டுரைகளாவே எஞ்சிவிடுகின்றன. எடுத்துக்காட்டுக்கு அவரின் ‘புலி எதிர்ப்பு – முதலீட்டில்லா லாபம்’ என்ற கட்டுரையில் அவர் சென்ற வருடம் திருவனந்தபுரத்தில் புலம் பெயர்ந்த இலங்கையர் அமைப்பு நடந்திய மாநாடு (இந்த மாநாட்டில் எஸ்.வி.ராஜதுரை, ஆதவன் தீட்சண்யா போன்ற தமிழகத்து எழுத்தாளர்களும் கலந்துகொண்டார்கள்) இலங்கை அரசின் நிதி வழங்கலோடு செய்யப்பட்டது என்கிறார்.
அந்தப் புலம் பெயர்ந்த இலங்கையர்களின் அமைப்பான INSD மகிந்த ராஜபக்ச அரசின் மிகக் கடுமையான எதிரிகள். ‘சனல் 4′ வெளியிட்ட யுத்தக் குற்ற ஆவணத்தை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே ‘சனல் 4′ தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்தார்கள் என்பது பரகசியம். இது தொடர்பாக INSDயை இலங்கை அரசு நேரடியாகச் குற்றம்சாட்டியது. புகலிடத்தில், INSD அமைப்பு புலிகள் ஆதரவு அமைப்பென புலி எதிர்ப்பாளர்கள் சிலரால் குற்றமும் சாட்டப்படுகிறது.
இந்த அமைப்பினர் கடந்த மாதம் ஜெர்மனியில் நடத்திய கருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியவர் ராஜபக்ச அரசினால் கடத்திக் காணாமற் செய்யப்பட்ட ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னாலிகொடயின் மனைவி சந்தியா. அங்கே அவர் கண்ணீருடன் ராஜபக்சவிடம் நியாயம் கேட்டு நெகிழ வைக்கும் ஓர் உரையை நிகழ்த்தினார். அந்தக் கருத்தரங்குக்கு வந்திருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிகேவா மகிந்தரின் புதிய அரசியல் சாசனம் குறித்துத் தும்பு தும்பாகக் கிழித்துத் தோரணம் கட்டினார். தொழிற்சங்கவாதி சமன் சமரசிங்க, ஊடகவியலாளார் லாகிர் இருவரும் இலங்கையில் சனநாயகமே அற்றுப்போய்விட்டதெனக் கொதிப்புடன் உரை நிகழ்த்தினார்கள்.
இலங்கை அரசைக் கடுமையாக எதிர்க்கும் தமிழ் – சிங்கள – இசுலாமிய உறுப்பினர்களைக்கொண்ட இந்த அமைப்புக்கு இலங்கை அரசு பணம் வழங்குகிறது என்றால் வேடிக்கையாயில்லையா! இலங்கை அரசு இந்த அமைப்புக்குப் பணம் வழங்குகிறது என்ற எழிலனின் குற்றச்சாட்டுக்கு அவர் முன்வைக்கும் ஆதாரமென்ன? எதுவுமேயில்லை. இவ்வாறான போலியான குற்றச்சாட்டின் மூலம் அவர் இலங்கை அரசின் உறுதியான எதிர்ப்பாளர்களை அவமதிக்கிறார். INSD அமைப்பு ஜெர்மனிய தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்றின் உதவியில் தங்கியிருக்கிறது என்று விமர்சிப்பது எழிலனின் உரிமை. ஆனால் இலங்கை அரசின் நிதியைப் பெறுகிறார்கள் என ஆதாரமேயில்லாது பொரிந்து தள்ளுவது அவதூறே. அப்படியானால் எழிலன் ஏன் இந்த மாநாட்டின் மீது அவதூறைப் பொழிய வேண்டும். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் கடுமையாகப் புலிகளை விமர்சிப்பவர்களுமிருந்தார்கள். அவ்வளவே. புலிகள் கருத்தைத் துப்பாக்கியாலும் எழிலன் கருத்தை அவதூறுகளாலும் எதிர்கொள்ளும் சூக்குமம் இதுவே.
அருள்எழிலன் ஆசிரியராகப் பங்களிக்கும் ‘இனியொரு’ இணையத்தளம் அ. மார்க்ஸின் இலங்கைப் பயணம் குறித்து இவ்வாறு எழுதியது:
“தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றிகொண்ட பின் தமிழகத்து எழுத்தாளர்கள் இலங்கை அரச அமைப்புக்களின் அனுசரணையுடன் இலங்கைக்கு வருகை தருவது தற்போது அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும் இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (எஸ்.எல்.டி.எப்) முக்கிய பிரமுகருமான ரங்கன் தேவராஜனின் பயண ஏற்பாட்டில் தமிழ் நாட்டு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இலங்கை வந்து சென்றது குறிப்படத்தக்கது. (இனியொரு/ 08.03.2010)
அ.மார்க்ஸ் ஒரு இஸ்லாமிய அமைப்பின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். ஆதவன் மலையக இலக்கிய அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் சென்றிருந்தார். இருவருடைய பயணத்திற்கும் இலங்கை அரசுக்கும் எதுவித தொடர்புமில்லை. அதைப்பற்றி இவர்களுக்கென்ன கவலை! அ.மார்க்ஸும் ஆதவன் தீட்சண்யாவும் புலிகளை விமர்சிப்பவர்கள், எனவே எந்த வகையிலாவது அவர்கள்மீது பழி சுமத்த வேண்டுமென்பதே இவர்களது ஒரே குறிக்கோள். ஆதவன் தீட்சண்யா ‘இனியொரு’வுக்கு மறுப்பும் அனுப்பியிருந்தார். அது குறித்தெல்லாம் அவர்களிற்கு அக்கறையில்லை. அவதூறு சொல்வது மட்டுமே அவர்களது பணி. லண்டன் வந்திருந்தபோது வெளிநாட்டுப் புலிகளால் நடத்தப்படும் GTV தொலைக்காட்சியில் எழிலன் ஒரு நேர்காணலைக் கொடுத்திருந்தார். அந்த நேர்காணலிலும் ‘உளவாளிகள் ஜாக்கிரதை’, ‘துரோகிகள் கவனம்’ என்றே அவர் புலம் பெயர்ந்த மக்களுக்கு வகுப்பெடுத்தார்.
இப்போது அருள்எழிலன் அவரது முகப் புத்தகத்தில் “கே.பிக்கு, டக்ளஸுக்கு, ராஜபக்சேவுக்கு அடிமையாகவும் அடிவருடிகளாகவும் இருப்பவர்கள் அடிமைப் புத்தி குறித்துப் பேசுவதுதான் டமாஸ்” என்றொரு செய்தியைப் போட்டிருக்கிறார். இதுதான் ஆகப் பெரிய டமாஸ்.
வெளிநாட்டுப் புலிகளுக்குள் பல குழுக்கள் இருந்தாலும் நெடியவன் குழுவும் ‘நாடு கடந்த அரசாங்கம்’ குழுவுமே பெரிய குழுக்கள். இந்த நாடு கடந்த அரசாங்கக் குழுவினரின் ஞானத்தந்தை கே.பி. இந்தக் குழுவினர் இன்றுவரை கே.பி.மீது விமர்சனம் வைத்ததில்லை. கே.பி. குற்றமற்றவரென்பதும் சூழ்நிலையின் கைதியென்பதும் இவர்களது நிலைப்பாடு. இந்தக் குழுவினரின் வசமுள்ள ஊடகங்கள் கே.பியை ஆதரித்து எழுதுவதும் அந்த ஊடகங்களை நெடியவன் ஆதரவு ஊடகங்கள் கடித்துக் குதறுவதும் வாராவாரம் நடக்கும் ஒரு டமாஸ். இந்தக் கே.பி. ஆதரவுக் குழுவினர்தான் அருள்எழிலன் கலந்துகொண்ட அந்த மாநாட்டை நடத்தியவர்கள். மற்றவர்கள் அங்கே நிதி பெறுகிறார்கள், இங்கே நிதி பெறுகிறார்கள் எனச் சதா குற்றம் சொல்லும் எழிலன் இந்தக் கே.பி. ஆதரவுக் குழுவினரின் பணத்திலேயே லண்டன் வந்து சென்றார். இப்போது யார் கே.பிக்குக் கால் கழுவுகிறார்கள் என எழிலனே சொல்லட்டுமே.
இதைக் கேளுங்களேன்! “நான் உடல் வருத்தி உழைத்த பணத்தில் பயணம் செய்து அரசியல் பேசுகிறேன், ஆனால் அருள்எழிலன் யாரோ கொடுக்கும் பணத்தில் லண்டன் வந்து அரசியல் பேசுகிறார்” என நான் முகப் புத்தகத்தில் ஒரு கொமன்ட் போட்டவுடன் அருள் எழிலன் “ஆம் நான் புலிக் காசில்தான் போனேன், இனியும் போவேன்” என நக்கலாக எழுதினார். அது என்ன புலிக்காசு? புலிகள் காடு வெட்டிக் கழனி செய்து கதிரறுத்துச் சம்பாதித்த பணமா அது? இசுலாமியர்களை வடக்கிலிருந்து விரட்டி அவர்களிடம் கொள்ளையடித்த பணமது. கிழக்கில் இஸ்லாமியர்களின் நிலங்களைத் திருடி வந்த பணமது. மக்களிடம் முட்டைக்கும் முட்டைபோடும் கோழிக்கும் வரிவாங்கிச் சேர்த்த பணமது. வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்குச் சென்ற மக்களை ‘நந்தவனம்’ அலுவலகத்தில் வைத்து மிரட்டிப் பறித்த பணமது. சர்வதேசமெங்கும் போதைப் பொருள் கடத்திச் சேர்த்த பணமது. புலம்பெயர் தேசங்களில் மக்களிடம் மிரட்டிப் பறித்த பணமது. அது குறித்து எழிலனுக்குக் குற்றவுணர்வு வராமல் நக்கல் வருவதை சுரணையற்றதனம் என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளால் நான் சொல்வது!
எனது முகப் புத்தகத்திலே அருள்எழிலன் தி.மு.க.தலைவரின் குடும்பப் பத்திரிகையான குங்குமத்தில் ஆசிரியப் பணியாற்றுவதையும் சாடியிருந்தேன். நான் வணிகப் பத்திரிகைகளில் வேலை செய்பவர்களைச் சாடுவதாக எதிர் கருத்துகளும் வந்தன. வணிகப் பத்திரிகைகளில் வேலை செய்பவர்களைச் சாடுவதல்ல எனது நோக்கம். நானே வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவன்தான். இலக்கியவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் வணிக இதழ்களில் கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முடிந்தளவு நமது கருத்துகளை வெகுசனப் பரப்பிற்கு எடுத்துவர வேண்டும் என்கிற கருத்துடையவன் நான். என்னுடைய வணிகப் பத்திரிகைப் பிரவேசம் எட்டு வருடங்களிற்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ நேர்காணலொன்றோடு ஆரம்பித்தது. அந்த நேர்காணலைச் செய்தவர் இதே அருள்எழிலன் என்பதும் ஒரு சுவையான தகவலே.
ஆனால் தமிழக முதல்வரது குடும்பத்தினரின் ஊடகங்கள் வெறும் வணிக ஊடகங்கள் மட்டும்தானா? அவை ஒரு கட்சியின், ஒரு குடும்ப ஆட்சியின் நலன்களை நோக்கில் கொண்டு நடத்தப்படுபவையல்லவா. அந்த ஊடகங்கள் ஈழத்தில் யுத்தத்தை நடத்திய காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு ஊறு நேராமல் செய்திகளைப் பக்கச் சார்பாகத் தருபவையல்லவா. அந்த ஊடகங்களில் ஊதியத்திற்காக ஒருவர் பணி புரிவதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் தன்னை அரசியற் போராளியாகவும் அறச் சீற்றமுள்ள எழுத்தாளனாகவும் துரோகிகளைத் துப்பறிபவனாகவும் கட்டமைத்துக்கொள்ளும் ஒருவர் அவருக்கு முற்றிலுமே அரசியல் எதிர்க் கருத்து நிலையிலிருக்கும் ஒரு ஊடக மாபியாக் குழுமத்தில் பணிபுரிவதை எவ்வாறு புரிந்துகொள்வது? இது தகிடுதத்தம் அல்லவா
எடுத்துக்காட்டாக எனக்கு EPDP யின் ‘தினமுரசு’ பத்திரிகையில்ல் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். “எனக்கும் EPDPக்கும் எந்தத் தொடர்புமில்லை, நான் ஊதியத்திற்காக மட்டுமே அங்கேயிருக்கிறேன்” என ஷோபாசக்தி சொல்வது அழகா? அவ்வாறு நான் சொன்னால் நீங்கள் என்னைக் கல்லால் அடிக்கமாட்டீர்களா? எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. ஒரு அரசியல் போராளிக்கு அரசியல் நிலைப்பாட்டை விட வயிற்றுப்பாடுதான் முக்கியமானது எனில் அந்த நிலைக்கு வேறு பெயர். ம.க.இ.க.வினரிடம் ஒரு சொல்லைக் கடன் பெற்றுச் சொன்னால்… ‘பிழைப்புவாதம்’! இத்தகையதொரு பிழைப்புவாதிக்கு அடுத்தவன் மீது ஆதாரமேயில்லாமல் அங்கே பணம் வாங்கினான், இங்கே பணம் வாங்கினான், அம்சாவிடம் விலைபோனான் எனச் சொல்வதற்கு என்ன தார்மீக அறம் இருக்கிறதென்று நான் கேட்பேனா மாட்டேனா?
லண்டன் ஊடக மாநாட்டில் எழிலன் “வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” எனப் பேசியிருக்கிறார். அங்கிருந்த அத்தனை குரங்குகளும் அதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றன. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கவிஞர் சேரன் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் “அவ்வாறு புலிகள் மக்களைத் தடுத்து வைத்தது தவறு” எனச் சொல்லியிருந்தார். எழிலனின் இந்தப் பிரகடனத்திற்கு அவர் என்னவிதமாக எதிர்வினையாற்றினார் என்பது தெரியவில்லை. மாநாட்டில் கலந்துகொண்ட எழுத்தாளர் நாகார்ஜுனனும் இதற்கு என்னவிதமாக எதிர்வினையாற்றினார் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் மவுனமாக இருந்திருப்பின் ஒரு சக இலக்கியவாதியாக நான் நிர்வாணத்தை உணர்கிறேன்.
லண்டன் மாநாட்டில் தான் பேசியது மிகச் சரியே என முகப் புத்தகத்தில் அறிவித்த எழிலன் கூடவே “கிளிநொச்சி
வீழ்ந்த போது மக்கள் விருப்பத்துடனேயே புலிகளுடன் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தார்கள்” என்று புதியதொரு நச்சுக் குண்டையும் வீசினார். இதையெல்லாம் எழிலன் சொல்லி நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியிருப்பது எங்களது தலைவிதியல்லாமல் வேறென்ன!
நான் முகப் புத்தகத்தில் வரலாற்றை எழிலனுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. 1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கியபோது தமக்கு அரணாக மக்களையும் ஓட்டிச் சென்றார்கள். அவ்வாறு வர மறுப்பவர்கள் ‘தேசத்துரோகிகள்’ எனவும் ‘தண்டனைக்குரியவர்கள்’ எனவும் ஒலிபெருக்கியில் வீதிவீதியாக அறிவித்தார்கள். 2006 ல் யுத்தம் தொடங்கியவுடனேயே வன்னி பெருநிலப் பரப்பின் கதவுகள் புலிகளால் மூடப்பட்டன. சிறுவர்களைக் கண்மூடித்தனமாகக் கட்டாயமாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்கள். பணம் படைத்தவர்கள் புலிகளிடம் பணம் செலுத்தி ‘பாஸ்’ பெற்று யுத்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற, துணிந்தவர்கள் காடுகளுக்குள்ளால் தப்பி ஓடினார்கள். புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இரகசியமாக அழைத்துச் சென்று விடுவதற்கு வன்னியில் ஏஜெண்டுகளே இருந்தார்கள். புலிகளின் கையிலிருந்த கடிவாளக் கயிறு மரணக் கயிறாக மக்களின் கழுத்திலிருந்தது. முள்ளிவாய்க்காலில் சரணடையும் முடிவை எடுக்கும்வரை புலிகள் அந்தக் கயிற்றை விடவேயில்லை. எழிலனோ மக்கள் இயல்பாகவே புலிகளுடன் சென்றார்கள் என வாய் கூசாமற் சொல்கிறார்.
இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் மக்கள் புலிகளிடம் பட்ட கற்பனைக்கும் எட்டாத துயரங்களையும் புலிகளின் மிருகத்தனமான கொடூரங்களையும் குறித்து நிறையப் பேர்கள் சாட்சியமளித்துவிட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் எழிலன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து த. அகிலன் சொன்னார். புலம் பெயர் நாடுகளிலிருந்து நாங்கள் சொன்னோம். எதையும் எழிலன் நம்ப மறுக்கிறார். தனது வழக்கப்படி இவ்வாறு சொல்பவர்களை ‘அம்சாவின் அடிவருடிகள்’ என்று அழைக்கவும் அவர் தயங்கமாட்டார். ஆனால் ‘புதிய ஜனநாயகக் கட்சி’யின் தலைவர் சி.கா. செந்திவேல் சொன்னால் எழிலன் நம்பக்கூடும் என நினைக்கிறேன். ஏனெனில் எழிலன் ஆசிரியத்துவம் செய்யும் ‘இனியொரு’ இணையத்தோடு செந்திவேல் நெருங்கிய தோழமையுள்ளவர். அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ம் தேதி பாரிஸில் செந்திவேல் ஒரு கருத்தரங்கிலும் கலந்துகொள்கிறார்.
02 ஒக்டோபர் 2010ல் கனடாவில் நடந்த கருத்தரங்கொன்றில் சி.கா. செந்திவேல் நிகழ்த்திய உரையின் சிறுபகுதியிது:
“நமது தோழர்கள் சிலர் வன்னிக்குச் சென்றோம். கண்கொண்டு பார்க்க முடியாத கோலத்தில் வன்னி இருந்தது. அங்கிருந்த பலருடன் உரையாடினோம். இது இங்குள்ள பலரால் உள்வாங்கிக் கொள்ள முடியாதது. இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளைச் சொன்னவர்கள் தம்மைப் பலாத்காரமாக புதுமாத்தளன் வரையிலும் இழுத்துக்கொண்டு போனவர்கள் செய்த கொடுமையையும் அவர்கள் சொன்னார்கள். சுட்டிருக்கிறாhகள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கிறாhகள். பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போனபோது வாகனத்தின் முன் படுத்துக்கிடந்து தடுத்த தந்தையின் தலைக்கு மேலால் வாகனத்தை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள்
இவ்வாறு தமது மக்களையே கொன்றொழித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை இயக்கம் என்று எப்படிச் சொல்வது?” -(matrathu.com – 09.10.2010)
புலிகளிடம் பணயக் கைதிகளாக, மனிதக் கேடயங்களாக அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கும்படி அய்.நா. கேட்டது, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கேட்டது, யுனிசெப் கேட்டது, சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டது, செஞ்சிலுவைச் சங்கம் கேட்டது, மனிதவுரிமையாளர்கள் கோரினார்கள், எழுத்தாளர்கள் – கலைஞர்கள் கோரினார்கள், புலிகளிடம் அகப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் கோரினார்கள். இவையெல்லாம் எழிலனுக்கு அநீதியாகத் தெரிகிறது. அப்போது எதுதான் நீதி? புலிகளிடமிருந்து தப்பி ஓடிய மக்களைப் புலிகள் முதுகில் சுட்டு வீழ்த்தியதும், தப்பியோடும்போது பிடிபட்டவர்களை மக்கள் மத்தியில் கட்டி வைத்துச் சுட்டுக்கொன்றதும், புலிகள் பிடிக்க வருகிறார்கள் என்றவுடன் கடற்கரைக்கு ஓடிச்சென்று தங்களைப் பாயாலோ சேலையாலோ சுற்றிக்கொண்டு மலம் கழிப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த சிறுமிகளைப் புலிகள் பச்சை மட்டையால் அடித்து இழுத்துச் சென்றதுமே நீதியென அருள்எழிலன் சொல்லக் கூடும்.
இவ்வளவிற்கும் “எல்லாம் கை நழுவிப் போன சூழலில் நடேசன் ஏந்தியதாகச் சொல்லப்பட்ட வெள்ளைக்கொடி என்பது என்ன? அது அய்ம்பது ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கடைசியாகப் பறக்கவிடப்பட்ட சமாதானக் கொடியா? ஏன் இந்தக் கொடியை நம்மால் மக்கள் படுகொலையாவதற்கு முன்னால் ஏந்த முடியாமல் போனது” எனக் கேட்டுத் தனது நூலில் (பக்:153) சென்ற வருடம் எழுதியவர்தான் எழிலன். இதே எழிலன் இந்த வருடம் லண்டன் வந்து “மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே” எனச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது! ‘நக்குண்டார் நாவிழந்தார்’ எனச் சொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை.
ஏனெனில் எழிலனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பத்திரிகைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே நாங்கள் நண்பர்களாயிருந்தோம். இந்துத்துவ எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போன்ற விடயங்களில் மிகுந்த முனைப்போடு எழுதக் கூடியவர்தான் எழிலன். கடந்த சில வருடங்களாகவே அவரது தீவிர புலி ஆதரவு நிலைப்பாட்டை நான் கவலையோடு கவனித்து வந்தாலும் தமிழகத்திலிருக்கக் கூடிய சராசரி – குறிப்பாகத் திராவிடக் கருத்துகளில் பற்றுறுதி கொண்ட – ஒரு இளைஞரது மனநிலை அது என நான் புரிந்து வைத்திருந்தேன். அந்தப் புரிதல் இல்லாத பட்சத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பு இளைஞர்களிடமும் நான் தொடர்ந்து ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருப்பது சாத்தியமாகியிருக்காது. எல்லாவித நவீனத்துவமும் அமைப்பியல்வாதமும் மார்க்ஸியமும் கற்ற பேராசிரியர் தமிழவனே சி.என்.அண்ணாத்துரையையும் பிரபாகரனையும் ஒப்பிட்டு ‘லூட்டி’ அடித்துக்கொண்டிருக்கும்போது, நவீன கவிதையைக் கரைத்துக் குடித்த சி.மோகன் அண்ணனே “பிரபாகரா ஒளி கொண்டுவா” என உணர்ச்சிப் பாவலராக மாறிவிடும்போது, இந்த இளைஞர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை என்றே நான் நினைத்திருந்தேன்.
ஆனால் அருள்எழிலன் அணிந்திருக்கும் மானிட நேயமிக்க ஊடகவியலாளன் என்ற முகமூடிக்குப் பின்னேயிருக்கும் முகத்தில் புலியின் வரிகள் அழுத்தமாகப் பதிந்திருப்பதை லண்டன் ஊடக மாநாட்டில் அவர் பேசிய பேச்சு எனக்குப் புரிய வைத்துள்ளது. தவறுக்கு மேலே அவர் தவறு செய்துகொண்டே போகிறார். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்ததை நியாயப்படுத்த கிளிநொச்சியில் மக்களைப் புலிகள் கட்டுப்படுத்தவில்லை என்கிறார். அதை நியாயப்படுத்த ‘ நான் புலிக் காசில் பயணம் செய்தால் உனக்கென்ன?’ எனக் கேட்கிறார்.
இனி அருள்எழிலனுக்குச் சொல்வதற்கு ஒரு சீனப் பழமொழி மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளது:
தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்!
thankyou- shobasakthi.com
மாயா
//அசோக் யோகன் (PLOTEன் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர் – ENDLFன் நிறுவனர்களில் ஒருவர்) சபா. நாவலன் ( முன்னாள் TELO உறுப்பினர்) ஆகிய இருவரும் கூடப் புலிகளின் பார்வையிலே ‘துரோகிகள்’ என்பதும் அவர்கள் புலிகளுக்கு அஞ்சியே புலம் பெயர்ந்து வந்தார்கள்//
அசோக்கிற்கு பாரிசில் புலிகள் தாக்கிய போது ; அவருக்காக கதறியவர்களை அசோக் மற்நது விட்டாரா? இல்லை அடிக்கு பின் பணிந்து விட்டாரா? காலம் பதில் சொல்லும்.
//எனது முகப் புத்தகத்திலே அருள்எழிலன் தி.மு.க.தலைவரின் குடும்பப் பத்திரிகையான குங்குமத்தில் ஆசிரியப் பணியாற்றுவதையும் சாடியிருந்தேன்.//
கருணாநிதியை ; வைகோவும் நெடுமாறனும் பிரபாகரன் தன் காலில் விழ வேண்டும் என பேசாமலிருந்தார் என வசை பாடுகிறார்கள். ஆனால் அருள் எழிலனோ அதே மனிதரது காலடியில் இருந்து கதை வடிக்கிறார். இது பிழைப்புவாதமே தவிர கொள்கை வாதமல்ல.
//தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து திரும்பி வாருங்கள்!//
Sprit
BC
இப்படிபட்ட அருள்எழிலன் என்ற புலியை தான் லண்டன் வரவிருக்கும் நிலையில் அவரை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல என்று ஒருவர் தேசம்நெற்றில் வேண்டுகோள்விட்டார் என்பதையும் கவனத்தில் எடுங்கோ.
// -தவறுக்கு மேலே அவர் தவறு செய்துகொண்டே போகிறார். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருந்ததை நியாயப்படுத்த கிளிநொச்சியில் மக்களைப் புலிகள் கட்டுப்படுத்தவில்லை என்கிறார். // சோபாசக்தி
இதை தான் மகஇக என்கிற மார்க்சிய லெனினிய புரட்சிகர அமைப்பு சொன்னது சமீப காலமாக அருள் எழிலன் தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர் என்று.எங்களுக்கு அருள் எழிலனை பற்றி தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தான் மகஇக பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ashroffali
//இப்படிபட்ட அருள்எழிலன் என்ற புலியை தான் லண்டன் வரவிருக்கும் நிலையில் அவரை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல என்று ஒருவர் தேசம்நெற்றில் வேண்டுகோள்விட்டார் என்பதையும் கவனத்தில் எடுங்கோ.//
BC நான் தான் அதை பின்னூட்டம் இட்டேன் என்பதை பெயர் குறித்து எழுதியிருக்கலாமே…
நண்பரே.. நான் அன்றைக்கும் இன்றைக்கும் கருத்துச் சுதந்திரம் என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றேன். ஒரு காலத்தில் நான் எழுதிய தீவிரமான கருத்துக்களை தேசம் தணிக்கை செய்திருந்தால் நான் உங்களில் பலருக்கு அறிமுகமில்லாமாலேயே போயிருக்கவும் கூடும்.
அன்றைக்கு தேசம் என் கருத்துக்களை மதித்தது. நான் என்னைப் பட்டை தீட்டிக் கொண்டேன். அதே கருத்தைத் தான் நான் அருள் எழிலன் விடயத்திலும் பின்பற்றுகின்றேன். முதலில் கருத்துக்களை மதிக்கும் பக்குவம் நமக்கு வேண்டும். அதை நாசுக்காக சுட்டிக் காட்டும் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் எனக்குப் பரிச்சயமான சொற்ப காலத்துக்குள்ளேயே நான் இந்தியர்களின் மன நிலையை நன்றாக விளங்கிக் கொண்டேன். இலங்கை என்றாலே தமிழில் பேசவும் முடியாது.. தமிழ் வானொலி எதுவும் கேட்க முடியாது என்பன போன்ற கருத்துக்களை அந்த மக்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் பெரும்பாலான இளைஞர்கள் தமிழ் மக்களின் விடிவு என்ற விடயத்தில் கூடுதலான ஆர்வம் மற்றும் ஆதரவுப் போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக இலங்கை அரசாங்கத்தை தமதும் பொது எதிரியாகவே கணிக்கின்றார்கள். அதன் போது புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களும் இருக்கின்றார்கள். இது தான் யதார்த்தம். அதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்தது நாம் நமது மக்களின் துன்பியல் வரலாற்றுத் தடங்களின் போது இந்தியாவை நோக்கி அபயக் கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இந்தியா என்றவுடன் நாம் ஒட்டுமொத்த இந்தியாவையும் விட நமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ் நாட்டு மக்களையே பெரிதும் நம்பியிருந்துள்ளோம்.
அந்த வகையில் நாம் தேவை என்றவுடன் அவர்களை வலிந்து அழைக்கவும் தேவையில்லை என்றவுடன் ஒதுக்கி வைக்கவும் அவர்கள் ஒன்றும் அழையா விருந்தாளிகள் அல்ல. எனவே அந்த மக்களில் ஒரு சிலர் நமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தால் அதனை நல்லமுறையில் அணுகி அவர்களுக்கான தெளிவுபடுத்தல்களைக் கொடுத்து நமது வழிக்குக் கொண்டு வருவது தான் விவேகமான வழி. அதை விட்டு நாம் எடுத்ததற்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது அழகல்ல.
இலங்கை அரசாங்கத்தின் இன்றைய நிலைப்பாட்டின் படி எதிர்வரும் காலங்களில் இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை முன் வைக்கக் காத்திருக்கின்றது. அதில் ஒன்று உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலம். அதனை நிறைவேற்றியவுடன் அதற்கு ஆதரவளித்தவர்களுக்குக் காத்திருக்கின்றது ஆப்பு. எமது சிறுபான்மை மக்களின் எதிர்கால பிரதிநிதித்துவத்துக்கே ஆபத்து வந்த பின் தான் அதன் யதார்த்தம் என்னவென்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நான் அனைத்தையும் துறந்து விலகி வந்ததன் நியாயத்தையும் உணர்ந்து கொள்வார்கள்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் 19வது அரசியலமைப்புத்திருத்தம் என்று அழைக்கப்படும். அது அமுலுக்கு வந்தவுடன் இன்றிருக்கும் தமிழ்-முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதியளவு கூட அடுத்த தேர்தலின் பின் தொரிவு செய்யப்பட மாட்டார்கள். இலங்கையெங்கும் சிங்களவர்களின் பரவல் காரணமாக நமது வாக்குப் பலம் சிதைக்கப்பட்டு நமது பிரதிநிதித்துவம் கணிசமானளவு குறைந்து போகும். அதன் பின் தான் எல்லோரும் கையைப் பிசையப் போகின்றார்கள்.
அடுத்ததாக 20வது அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்த வருட நடுப்பகுதியில் அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்ப்பிக்கவுள்ளது. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் அதற்கு பாரிய விளம்பரம் கொடுக்கப்படும். ஆயினும் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற பல அதிகாரங்கள் அதன் மூலம் பிடுங்கப்பட்டிருக்கும். அதுதான் உண்மை.
புலிகள் இருக்கும் வரை சமஷ்டி வரை சிந்தித்தவர்கள் எல்லாம் தற்போது பிரதேச சபை அதிகாரம் கூட தர முடியாது என்று எக்காளமாகப் பேசுவதை நீங்கள் நேரடியாக கேட்டிருந்தால் உங்களுடைய தன்மான உணர்வு கொதித்திருக்கும்.
இன்றைக்கும் கூட புலம் பெயார்ந்த புலிகள் அமைப்பு மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் தமிழரின் ஊடகங்கள் என்பவற்றின் மீதுள்ள பயம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் வட பகுதியில் சிற்சில அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு அதிகாரப் பரவலாக்கம் என்று கூறிக் கொண்டிருக்கின்றது. மற்றபடி இந்தியாவுக்குப் பயந்தல்ல. ஏனெனில் இந்திய மத்திய அரசாங்கத்தின் போக்கு எப்படியானது என்று யாரும் எனக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை. எனவே நம்ப முடிந்தவர்கள் நம்புங்கள்.
எனவே நாம் தமிழகத்தில் நமக்கான ஆதரவுச் சக்திகளை வலுப்படுத்துவது தவிர சிறு துரும்பையும் இழத்தலாகாது. அருள் எழிலனின் கட்டுரைகளில் உண்மை இல்லாத போதிலும் அதனை நாகரீமான முறையில் சுட்டிக்காட்டுங்கள்.
அடுத்தது மதிப்பிற்குரிய சபா நாவலன் விடயம்…
அவரது இனியொரு இணையத்தளத்தை வாசிப்பவர்களுக்கு நடுநிலையானதொரு தளம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் மட்டுமல்ல எதிரான கருத்துக்களும் அதில் பிரசு ரிக்கப்படும் கட்டுரைகள் தாங்கி நிற்கின்றன. அத்துடன் ஒரு காலத்தில் அவரும் இதே தேசம் நெற்றில் இருந்தவர்தான்.
எனவே நமக்குள் ஆரோக்கியமான கருத்து முரண்பாடுகள் இருக்கட்டும். அது நமது பாதையைச் செப்பனிடும். நமது எதிர்கால சந்ததியாவது இவ்வாறான அனாதரவான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதாயின் நமக்குள்ளான வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமை நிலவ வேண்டும். அதன் போதுதான் நாம் பலமாக எழுந்து நிற்க முடியும். அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு என்பதை நாம் மறந்துவிடலாகாது.
arulezhilan
ஷோபாசக்தி – புலி படுத்தது.. நாய் நரியானது !
-http://athirai.blogspot.com/2010/11/blog-post.html