தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் யாழ்.குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள டெங்கு நோயைக் கட்டப்படுத்தும் நோக்கில் இன்று முதல் 13ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்விடங்களில் தீவிரமாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது, வீடுகள் தோறும் சென்று டெங்கு நோய் குறித்து விளக்கமளித்து பொதுமக்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்குத் தூண்டுவது. டெங்கு நுளம்புகள் பரவக்கூடியதான விதத்தில் சுற்றாடலை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் டெங்கு ஒழிப்பு வாரத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.