வெள்ளவத்தை மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தவருமான செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் கூறியதாவது;
வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து செல்வரட்ணம் செல்வராணி (62 வயது) என்ற பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனக்கு பார்வைக்கோளாறு உட்பட பல நோய்கள் இருப்பதாகவும் அதனால் தான் தனது குடும்பத்திற்குப் பாராமாக இருக்க விரும்பாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தப் பெண் நீண்டகாலமாக கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவரின் தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.