வடமராட்சி மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர யாழ்.மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அனுமதியளித்துள்ளார். நேற்று மாலை பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடம் இடம் பெற்ற சந்திப்பில் அவர் இவ்வனுமதியை வழங்கினார்.
போர் நடவடிக்கைகளால் சில வருடங்களுக்கு முன்னர் டமராட்சிக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுதல் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று பலாலி படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது இம்மக்களில் வாழ்வாதார பிரச்சினைகள் உட்பட்ட அம்மக்கள் அவர்களின் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுவதன் அவசியம் குறித்தும் யாழ்.அரசாங்க அதிபர் படைத்தளபதிக்கு விளக்கிக் கூறினார். இதனயடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதற்கட்டமாக நாளை திங்கள் கிழமை வடமராட்சிக்கிழக்கின் அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த அம்பன் பகுதியில் 81 குடும்பங்கள் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. அத்துடன் செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2அயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேர் மீளக்குடியமர்வதற்கான அனுமதி நேற்று படைத்தளபதியால் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ். மாவட்டச்செயலகம் மேற்கொள்ளவுள்ளது.