அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பான விடயங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காதென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிப்பதென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடம் கூடி முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பேச்சு களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு ஏதேனும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது;
இது முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்டமுடிவு.இதனால் எம்மிடையேயான பேச்சுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுமென நினைக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரை சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.அது முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி.மலையக தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களாக இருந்தாலும் சரி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே,அந்தப் பேச்சுகளுக்கு ஆபத்து இருக்காதென நினைக்கிறேன்.