வெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தரை வழியாக வடபகுதிக்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தரைவழியாக யாழ் செல்வதற்கு தொடர்ந்தும் தடை அமுலில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வரும் சுற்றுலாப்பயணிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் விமானம் மூலமாக மட்டுமே யாழ்ப்பாணம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதியின்றி தரைவழியாக பயணிக்க அனுமதி இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரவித்துள்ளார்.
வெளிநாட்டிலுள்ள இரட்டைக் குடியுரிமையுள்ள இலங்கையர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தும்; எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே வவுனியாவிற்கு அப்பால் செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வாசுதேவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் பயணம் செய்வதற்கு மூன்று தினங்களுக்கு முன் பயணவிபரங்களையும் கடவுச்சீட்டு விபரங்களையும் தொலை அஞ்சல் செய்தால் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை இலங்கையில் வழங்கப்படும் தொலைஅஞ்சலுக்கு அனுப்பி வைக்கும். இல்ரலையானால் நேரடியாகச் சென்றும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். இந்நடைமுறை வெளிநாட்டவர்கள் சிலர் ஆயுதப் போராட்டத்தை தூண்டிவிடும் முயற்சிகளில் ஈடுபடுவதையொட்டியே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட மற்றுமொருவர் இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்கள் மீது தமிழ் பிரதேசங்கள் மீது அரசு நெருக்கடியை வழங்குவதையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.