வேலணை வைத்தியசாலை மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நேற்று முன்தினம் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் கொழும்பில் பிரேத பரிசோதனைக்குபடுத்தப்பட்ட போது தர்சிகாவின் உடலின் உள் உறுப்புக்கள் எவையும் இருக்கவில்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
30-07-2010 அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் தர்சிகாவின் சடலத்தை யாழ்.வைத்தியசாலை பிரேத அறையில் வைத்து துப்புரவு செய்த பணியாளர்கள் இருவரை கைது செய்யும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் அவர்களை உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தினார்.
தர்சிகாவின் உடலின் உட்பாகத்திலிருந்த உறுப்புக்களை வேறாக எடுத்து யாழ். கொட்டடியிலுள்ள மயானத்தில் புதைத்ததாக அவாகள் விசாரணையின் போது தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற நீதவான் அவ்வுறுப்புக்களைத் தோண்டியெடுத்து கொழும்பிற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டார். தற்போது அவ்வுறுப்புக்கள் யாழ்.வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பிரேத துப்பரவு பணியாளர்கள் இருவரையும் எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.