இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 3038 விடுதலைப்புலி உறுப்பினர்கள், போராளிச் சிறுவர்கள் ஆகியோர் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சகல விடுதலைப்புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வளிக்க முடியும் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் பற்றிய விபரத்தை வெளியிட அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை செஞ்சிலுவைச்சங்கம் ஆகிய அமைப்புகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளைச் சந்திப்பதையும் அரசு திட்டமிட்டு தடுத்து வருகின்றது. தடுத்த வைக்கப்பட்டு உள்ளவர்கள் பற்றிய பட்டியலை அரசு வெளியிடாததால் பல பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதனையே அறிய முடியாமல் உள்ளது. இது பல குடும்பங்களில் பாரிய உளவியல் தாக்கத்தையும் அலைச்சலையும் ஏற்படுத்துகின்றது.
குடும்பங்களுடன் இணைக்கப்ட்ட இவர்களுக்கு மறு வாழ்வளிப்பது என்பது சவால்கள் நிறைந்த பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார். போராளிச் சிறுவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா இந்துக்கல்லூரியில் கல்விகற்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும். கொழும்பு பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் அனைத்து வசதிகளும் இப்போராளிச் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.