இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழுவிடம் உறுதியளித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் கருணாநிதியை நேற்று செவ்வாய்க்கிழமை அவரின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே கலைஞர் இந்த உறுதிமொழியை அளித்திருக்கிறார்.
“தமிழர்களின் நலன்கள் தொடர்பாக இந்தியாவினதும் தமிழக முதலமைச்சரினதும் தலையீட்டை நாம் கோரியுள்ளோம என்று கருணாநிதியுடனான சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் சம்பந்தன் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று தெரிவித்தது.
கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசு அறிவித்திருந்த தமிழர்களுக்கான புனர்வாழ்வு விடயங்களில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு விசேட தூதுவர் ஒருவரை அனுப்பிவைக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் கோரியிருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
