ஐ. நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; – உள்ளூர், சர்வதேச பொறுப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசு கையாள்கை – தகவல் திணைக்களம் அறிக்கை

unproout.jpgகொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு வெளியே நேற்று முன் தினம் (06) இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் அதன் உள்ளூர் மற்றும் சர்வதேச பொறுப்புகள் நிறைவேறும் வகையில் கையாண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரட்ன அத்துகலவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் உள்ளூர் மட்டத்தில் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது. எனவே, சமாதான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, அலுவலகத்துக்கு வெளியே சமாதான முறையில் கூடுவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அதேவேளை, அரசாங்கம் தனது சர்வதேச பொறுப்பை நன்குணர்ந்த நிலையில் ஐ. நா. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்பவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போதுமான பொலிஸாரை அங்கு குவித்திருந்தது. அலுவலகம் மற்றும் அதற்குள் இருப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விழிப்புடனும் எதனையும் சமாளிக்கும் நிலையிலும் இருந்தனர்.

அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் மாலையில் வேலை முடிந்ததும் சுதந்திரமாக வெளியேறுவதற்கு பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். பெருமளவு ஊழியர்கள் இவ்வாறு வெளியேறிய பின்னர், ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் மட்டுமே உள்ளே இருந்தபோது, வெளியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரியொருவருடன் பேச வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். இலங்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உதவுவதற்காக ஐ. நா. செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளமை தொடர்பாக தமது கவலையைத் தெரிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இந் நிலையில், வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு ஐ. நா. அலுவலகத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு சிலர் மட்டும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடன் ஐ. நா. அலுவலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை சந்தித்து தமது கருத்தை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த செயற்பாடு நிறைவேற்றப்பட்டதையடுத்து ஐ. நா. உத்தியோகத்தர்கள் அலுவலகத்தை விட்டகன்றனர்.

இந் நிலையில் கொழும்பில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் எதிர்காலத்தில் வழமை போல் இயங்கும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இலங்கை தொடர்பான ஆலோசனைக்குழு விடயம் மீள் பரிசீலனை செய்யப்படும் வரை எதிர்ப்பியக்கம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதாக அரசாங்கத்துக்கு தெரிந்துள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்குள் அதிகாரம் பெறப்பட்ட நபர்கள் சென்று வருவதற்கான சுதந்திரம் வழமை போன்றே தொடர்ந்தும் இருந்து வரும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *