பலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்களுடன் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பலஸ்தீனத்திற்கு உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துருக்கி கப்பல் தலைமையில் ஆறு கப்பல்கள் சைப்பிரஸிலிருந்து காஸாவுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது சைப்பிரஸ¤க்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலியப் படையினர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது கப்பல்களில் 600 பேர் இருந்ததாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவித்தன. இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கண்டனத்திற்கும் உள்ளாகின. சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் இஸ்ரேலிடம் கோரியுள்ளன.

கஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல்களில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தன்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கூறியுள்ளார். இஸ்ரேலின் இந்த முற்றுகை தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அவசரமாக கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தை கேள்வியுற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் தெதன்யாஹு கனடா மற்றும் அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரபூர்வ விஜயத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இஸ்ரேலின் நெருங்கிய சகாவான அமெரிக்க சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதையிட்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றதன் சூழ்நிலை குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் நடுவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வத்திக்கான் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளையிட்டு அதிர்ச்சியும் கவலையும் தெரிவிப்பதாக மத்திய கிழக்கு சமாதானத் தூதுவர் டோனி பிளெயர் கூறியுள்ளார். இடம்பெற்ற முற்றுகை பலவந்தத்தின் முறையற்ற பாவனை என்று பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல் ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கை’ என்று அரபு லீக் கூறியுள்ளது. 22 நாடுகளைச் சேர்ந்த அரபு லீக் அவசர கூட்டம் நடத்தி இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று அரபு லீக் தலைவர் அமீர் மூஸா கூறியுள்ளார்.

காஸாவில் ஆட்சி நடத்தும் ஹமாஸ், சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களில் இறங்குமாறு முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேலிய உதவி தூதரக அலுவலகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் அதிக பலாத்கரத்தை பிரயோகித்துள்ளதாக சம்பவம் பற்றி சர்வதேச மன்னிப்பு சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் மெல்கம் ஸ்மார்ஸ் கூறியுள்ளார்.முற்றுகை தொடர்பாக ‘உடனடியான நியாயமான சுதந்திர விசாரணை நடத்த வேண்டுமென்றும், காஸா மீதான தடைகள் நீக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இந்நிலையில் தனது படையினர் தற்பாதுகாப்புக்காகவே இவ்விதம் நடந்து கொண்டதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களே முதலில் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *