”குடாநாட்டில் குற்றச்செயல்கள் தொடருமானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” யாழ். படைத்தளபதி

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். குடாநாட்டில் தொடர்ந்து குற்றச்செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் தேவைப்பட்டால் மேலும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.படைத்தளபதி  மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்ற வாழ வசதியாக பாதுகாப்பு விடயத்தில் சில கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

”குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்களை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான பலரை கைது செய்துள்ளோம். பொலிசார்  தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இக்குற்றச்செயல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டு பிடித்து, சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களின் அச்சத்தை நீக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் படுகொலையுடன் ஆரம்பித்து பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”வன்செயல்களை முடிவிற்கு கொண்டுவருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்தரையாடியுள்ளேன். சட்டம் ஒழங்கை நிலைநாட்டி. மக்களின் அச்சநிலையைப் போக்கி, அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்த ஏற்பாடு செய்யுமாறு அவர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாமல் விட்டால் மேலும் பல நடவடிக்கைளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக்கோ, வேறு எவருக்குமோ அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்” என்றும் படைத்தளபதி குறிப்பிட்டார்.

”சட்டத்தரணிகள் தங்கள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இச்செய்தியை உங்களிடம் கூறுமாறு பாதுகாப்புச் செயலாளர் என்னைப் பணித்துள்ளார்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில்; யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்து கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *