”நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!” : சிவஞானம் சிறிதரன் பா உ (ரிஎன்ஏ)

Sritharan_SivagnamTNA_MP(ரிஎன் பா உ சிவஞானம் சிறிதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வழங்கிய கன்னி உரையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது. கிளி / கிளிநொச்சி மகா வித்தியாலயம் (கனிஸ்ரா) அதிபரான இவர் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்தவர். ‘சிறி வாத்தி’ என தனது பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் கடந்த தேர்தலிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதற் தடவையாக பாராளுமன்றம் சென்றுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளராகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மனிதநேய அமைப்புகளின் இயக்குநர் சபை உறுபிப்பினராகவும் உள்ளார்.)

கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின்  அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.

இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

துருக்கிய பேரரசாலும்  ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும்  பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்க வேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை “பெண்களின் சொர்க்கம்” என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.

ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.

நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.

உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.

தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும்இ  இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.

சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    மக்களின் பிரதிநிதி மக்களுடன் செயற்ப்பட்ட ஒருவர் பாராளுமன்றம் வந்துள்ளார் வரவேற்போம்.

    Reply
  • BC
    BC

    நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம் என்கிறார், நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு என்கிறார், அப்படியானால் இவர் ஒரு புலி தான் .இவரால் மக்களுக்கு நன்மை கிடைக்க போவதில்லை.

    Reply
  • விசுவன்
    விசுவன்

    //இவர் ஒரு புலி தான் .இவரால் மக்களுக்கு நன்மை கிடைக்க போவதில்லை.//

    தயவு செய்து புலி முத்திரை குத்துவதை நிறுத்தங்கள்! புலிகள் தாயகத்தில் அழிக்கப்பட்டு விட்டார்கள்! விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் இராணுவ பலம் தமிழ் மக்களை ஆழுமைக்குள்ளாகியிருந்தததை நிராகரிக்க முடியாது! நாம் இவ்வாறு எல்லோரையும் நிராகரிப்பது தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டதில் இணைவதை நிராகரிப்பதாகும். மக்கள் இவரை தெரிவு செய்திருக்கிறார்கள்! பழைய குப்பைகளை கிளறுவதை விடுத்து புதிய திசையில் பணிக்க நாம் நிரப்ந்நதிப்பதே சாலச்சிறந்ததது!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலம்பெயர் நாட்டில்லுள்ள ஒரு இணையத்தளம் சிவஞானம் சீறிதரனின் கன்னிப்பேச்சை பாராளுமன்றம் இவர் உரையால் அதிர்ந்ததென்று எழுதியுள்ளது.
    ஆசிரியர் செஞ்சிலுவை சங்கத்தின் கிளைமுகாமையாளர் ஜேர்மனி ஐப்பான் இத்தாலி வரலாறு தெரிந்தளவுக்கு மே பதினெட்டுக்கு முன்பு வன்னியில் நடந்த வரலாறு தெரியாமலா இருக்கிறார். அல்லது சொல்ல விருப்பமில்லையா? அப்ப சொன்னால் உயிர் போய்விடும் என்ற எமக்கும் தெரிந்தது தான். இன்றுமா? ஓடினார்..ஓடினார் நந்திக்கடல் வரைக்கும் ஓடினார். ஓட்டிக்கொண்டு போனவர்கள் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டாமா?
    இல்மெயிட் வளம் கொள்ளையடிக்கப் படுகிறது இல்மெயிட்ல் இலங்கைத் சின்னஞ்சிறு தீவிலிருந்து என்னவற்றை செய்யமுடியும்? கூப்பனுக்கு அவுன்ஸ் கனக்கில் மக்களுக்கு கட்டிக் கொடுக்கச் சொல்கிறா? அல்லது கொள்ளையடிக்கிற பொறுப்பை தங்களுக்கு தரச் சொல்லுகிறாரா?.ஒரு இனத்தை பற்றி கதைக்கும் போது பனைமுனையில்லிருந்து தெய்வேந்திர முனைவரை மத்தியில்லிருந்து தலைநகர் வரை ஒட்டுமொத்தமாக அல்லவா தமிழர்கள் வாழ்கிறார்கள். வன்னியில் மட்டும் தான் தமிழ்இனம் வாழ்கிறது என நினைக்கிறாரா?

    பன்னிரென்டாம் திகதியில்லிருந்து பதினெட்டம் திகதிவரை வெற்றிவிழா கொண்டாப் போகிறார்களாம் அது தமிழ்மக்களின் மனத்தை சிதறடிக்குமாம். இந்த ஆசியர் யாருக்கு கதை சொல்லுகிறார். இங்கு தோற்றுப்போனது பயங்கரவாதம் கிறிமினல்தனம் அஜாரகம் மேற்குலகத்தின் சதிவேலைகள். இந்த வெற்றியில் பலியானது பல பத்தாயிரக்கணக்கான ஏழைத் தாய்தந்தைரின் பிள்ளைகள். சகோதர சகோதரனின் அண்ணன் தம்பிகள். அதுமட்டுமல்ல வன்னியில்யுள்ள மடிந்ததுபோக மிகுதி ஏழை சகோதர சகோதரிகள் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் மரணத்தை தளுவாமல் வாழ்வின் ஒளியை நோக்கிப் பயணிப்பார்கள்.

    இந்தவெற்றி இராணுவத்தின் வெற்றியல்ல ஒவ்வொரு இலங்கை பிரஜையின் வெற்றியாகும். ஒவ்வொரு இந்துவினுடைய ஒவ்வொரு இஸ்லாமியனுடைய ஒவ்வொரு புத்தனுடை வெற்றியாகும். அழிந்தது பயங்கரவாதமும் புலியுமென்று கொட்டு முரசே!. மலர்ந்தது ஐக்கியஇலங்கை என்று கொட்டு முரசே!!.

    ஆரம்பத்தில் இருந்து எனது கணிப்பு சரியாகவே நிறுவப்படுகிறது. இந்த கூத்தமைப்பு தமிழரசுக்கட்சி என்றுமே இனவாதத்திற்கு எண்ணை ஊற்றிக் கொண்டேயிருக்கும். இதில்லிருந்து வந்தவரே! சிவஞானம் சிறீதரன். இவர் வார்தைகள் அவ்வளவும் பசப்பு வார்த்தைகள். இலங்கை மங்காய்கனி பூமி உறுண்டை போன்ற வார்த்தைகள். கார்த்திகை மாவீரர் உரையில் கேட்டுப் பழக்கப்பட்டவை. இவரே தேசியத்தலைவருக்கு வாசிப்பதற்கு எழுதி கொடுத்திருப்பாரே! என சந்தேகப்படுகிறேன். எது எப்படியிருந்தாலும் இந்த ஆசிரியரில் “பக்கென” புலிமொச்சை அடிக்கிறது. இவரை தெரிவு செய்த கிளிநொச்சி மக்களுக்காக நாம் அனுதாபப்படத்தான் முடியும் தற்போதைக்கு.

    Reply
  • விசுவன்
    விசுவன்

    நீங்கள் இப்படி விமர்சிக்க புலி ஊடகம் ஒன்று இந்த ஈமெயிலை ஆனுப்புகிறது!

    //தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் சிறிவாத்தி எம்.பி

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிவாத்தி எம்.பி அவர்கள் நேற்றைய தினம் பாராளுமன்றில் கன்னி உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவர் உரையைக் கூர்ந்து கவனிப்போமேயானால், முதலில் ஏதோ தமிழர்கள் அழிக்கப்பட்டதை படம்போட்டுக் காட்டி, பின்னர் சர்வதேசம் சிங்கள அரசை நசுக்க முனைகிறது, எனவே தோழர்களே (சிங்களவரை) நாம் கரம்கோத்து நிற்போம் என்ற பாணியில் உரையை நிகழ்த்தியுள்ளார்.

    அதாவது முதலில் தமிழர்கள் அழிக்கப்பட்டதைச் சொல்லி, பின்னர் 2ம் உலகப் போரில் ஜப்பான் அழிந்து மீண்டெழுந்த கதையைச் சொல்லி, அதன் பின்னர் சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை ஒன்றுபட்டு முறியடிக்கவேண்டியது அவசியம் என்கிறார் சிறிவாத்தி. அப்படியாயின் நடந்த யுத்தக்குற்றங்களை நியாப்படுத்துகிறாரா சிறிவாத்தி எம்.பி. அல்லது சர்வதேசத்தை பிழை என்கிறாரா? யுத்தக்குற்றம் இழைத்த சிங்களதேசத்தை நியாப்படுத்துகிராரா ?

    தனது பாராளுமன்ற உரையின் தொடக்கத்தில், தமிழர்களின் துயர் துடைப்பது போலப் பேசி, பின்னர் சிங்களவர்களுடன் நட்புப் பாராட்டியுள்ளார் சிறிவாத்தி எம்.பி. அதாவது இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள். மெல்ல மெல்ல தமிழ் மக்களின் மனதில் நஞ்சைக் கலப்பது. நடந்த போர்க்குற்றங்களை மறைத்து, கொலைகளை மறைத்து, சிங்கள அரசின் அடிமைக்குள் தமிழனை நிரந்தரமாக தள்ள இவர் முயற்சிக்கிறார். அதுமட்டுமல்லாது சிங்கள தமிழ் இனப்பிரச்சனை ஏதோ சர்வதேசத்தால் தொடக்கப்பட்டது போல சர்வதேசத்தை சாடுகிறார்.

    சர்வதேச அரசுகளை குறைகூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஆகும். இவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டி பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக எத்தனை லட்சம் தமிழர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு அடக்குமுறைகள் இல்லையே. வேற்றின மக்களாக இந்த அரசாங்கங்கள் இவர்களைப் பார்ப்பது இல்லையே. சர்வதேச அரசியல் புரியாத இவரைப் போன்ற சில ஞானசூனியங்களால், தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளத்தான் முடியும். பாவம் வேறு அரசியல் இவர்களுக்குத் தெரியாது.//

    From: marupakam

    Reply
  • chandran.raja
    chandran.raja

    திரு.விசுவன் நீங்கள் தான் சொல்லுகிறீர்கள் புலி முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் என்று. புலி ஊடகம் அனுப்பியது என்றும் சொல்லுகிறீர்கள். அதன் கருத்துக்களை அவதானித்தால் அது புலியூடமாகத் தெரியவில்லை. புலிகளுக்கு இந்த ஞானம் இருந்தால் நடந்துமுடிந்த நிலைமைகளும் இன்று நடக்கிற நிலைமைகளும் வேறு விதமாக இருந்திருக்கும். எது எப்படியிருந்தாலும் வன்னி சிற்றரசர் மண்டைப் போட்டதும் புலிகள் பலபத்து துண்டுகளாக சிதறிப் போனது தான் உண்மை.

    அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமார் இனி நாம் ஆயுதத்தை தொடமாட்டோம் பயங்கரவாத வழிக்கு போக மாட்டோம் என்று அறிக்கை விட தமிழ்வின் நிராஜ்டேவிட் இலங்கை அரசை பழிதீர்ப்போம் என்று கட்டுரை எழுத ஜி.ரி.வி வலிதந்தவர் வளம் சிதைப்போம் என்று நிகழ்ச்சி நடத்தி புலமபெயர் மக்களை உசுப்பேத்திவிட எந்தநாட்டில் நாம் இருக்கிறோம் என்று தெரியாமல் வெறி உணர்வில் கத்த..ஜெகனிடம் யாரும் வந்துதொருவர் வந்து வளம் சிதைப்போம் என்றால் என்ன கருத்துக் கேட்க ஜெகன் கருத்தை மழுப்பி கதைசொல்ல.. நாட்டில் புலிகாலத்துப் பாணியிலே கொலைகள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடக்க என்னவென்று சொல்லுவது?.

    இப்படியான சம்பவங்களை டக்கிளஸ் தேவானந்தாவிலும் பிள்ளையான் கருணாவிலும் போட்டுவிட்டு நாம் சும்மா இருந்துவிடுவோமா?.இதன் சூத்திரதாரிகள் ஜனநாயகரீதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கூத்தமைப்பு கோஷ்டிக்குள் உள்ளவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். முழுமையாகச் சொல்லாவிட்டாலும் புலத்தில்லுள்ள வெறிபுலிகளுக்கும் சுரேஸ் பிமேச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் சரவணபவன் போன்றோருக்கு மீண்டும் தோன்றிய குளப்பநிலைகளுக்கு நிறையவே சம்பந்தம் உண்டு. தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது முழுஇலங்கை நம்மை கருதி செல்போனில் இருந்து முழு நடமாட்டத்தையும் கண்காணிப்பது அவசியமாகிறது. இதன் மூலமே! தேசத்தை பழையநிலைக்கு போகாதவாறு பாதுகாக்கமுடியும்.

    Reply
  • sen
    sen

    திரு சந்திரன்ராசா
    //தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாது முழுஇலங்கை நம்மை கருதி செல்போனில் இருந்து முழு நடமாட்டத்தையும் கண்காணிப்பது அவசியமாகிறது. இதன் மூலமே! தேசத்தை பழையநிலைக்கு போகாதவாறு பாதுகாக்கமுடியும்.//
    உங்களது தீர்க்க தரிசனத்தை கோத்தபாய நிச்சயமாக பாராட்டுவார். இங்கே அன்புடன் அவர் சொல்வதை கவனியுங்கள்:

    [துரோகிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ‐ கோதபாய ராஜபக்ஷ
    இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் எவராயினும் அவரை, தேசத் துரோகி என்றே கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துரோகிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும், அதற்காக எவரும் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கோதபாயராஜ பக்சாவின் அறிவிப்பில் என்ன புதுமை கண்டீர் திரு.சென் அவர்களே!
    முடிந்தால் வாசகர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.ஆரோகியமாகயிருக்கும்.

    Reply
  • ilanathan
    ilanathan

    இந்த வாத்தியார் முல்லைத்தீவின் இறுதி யுத்தத்தின்போது சிறுவர்களை பலவந்தமாக படையணிகளில் சேர்க்க உதவியவர் என்பது உங்களில் யாருக்குத் தெரியும்.

    தாய் தந்தையரிடமிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பறித்து புலிகளிடம் சேர்த்த கதைகளை முகாம்களில் வாழும் மக்களிடம் கேட்டால் தெரியும்.

    Reply
  • BC
    BC

    ஒரு வாத்தியார் செய்கின்ற வேலையா இது? அவர் தெளிவாக தான் ஒரு தோற்கடிக்கப்பட்ட புலி என்பதை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஈழநாதன் உங்கள் தகவலுக்கு நன்றி. இவை எதிர்பார்த்தது தான். இது ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் போது வலுவுடையதாக இருக்கும். கூத்தமைப்பின் “பம்மாத்து” அரசியலையும் தமிழ்மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டமுடியும். தயவு செய்து முயற்சியுங்கள்.

    Reply
  • Ajith
    Ajith

    “இந்த வாத்தியார் முல்லைத்தீவின் இறுதி யுத்தத்தின்போது சிறுவர்களை பலவந்தமாக படையணிகளில் சேர்க்க உதவியவர் என்பது உங்களில் யாருக்குத் தெரியும்.”தாய் தந்தையரிடமிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பறித்து புலிகளிடம் சேர்த்த கதைகளை முகாம்களில் வாழும் மக்களிடம் கேட்டால் தெரியும்.”

    Which camps ilanathan? I thought you were in the camps. Can you please give more details of how you came out of the camp.
    The election was held in Sri Lanka and most of the people elected him are those who lived in the camps, not from those live outside Sri Lanka and working for Rajapakse. Do you know that people in the camp are telling that those people who were working for Rajpakse is involved with the abduction of children in the North-East.

    Reply