தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் தலைமையில் பெரு வெற்றியோடு வந்து அமரும் எனக்கூறிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பகற்கனவாகவே முடியும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இந்த அரசாங்கம் எதற்காக மாதாமாதம் அவசரகால பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எது எப்படியிருந்தாலும எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்க இருக்கின்ற வேளையில் ஒரு சில உண்மைகளை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். கடந்த மே மாத இறுதியில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இலகுவாக தமிழ்மக்களின் பிரச்சினையைத் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி, தான் ஜனாதிபதித் தேர்தலின் பின்புதான் இப்பிரச்சினையை பேச இருக்கின்றேன் என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால்,ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பு தற்போது வேறொரு விதமாக ஜனாதிபதி தான் இந்த பொதுத்தேர்தலின் பின்பு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற புது முகங்களோடு இப்பிரச்சினையை பேசித்தீர்க்க இருக்கிறேன் என்று கூறி வருகின்றார்.
இந்த வேளையில் நான் சார்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக ஒரு உண்மையைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.இத்தேர்தலில் வடகிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ஏக மனதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றம் அனுப்ப இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் இதய சுத்தியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச முன்வரவேண்டும். அதற்கு எமது தலைமைத்துவம் தயார். அடுத்து இத்தேர்தலில் எமது கட்சியை எவ்வகையிலேனும் தோற்கடிக்க வேண்டுமென்று பலவித யூகங்கள் வகுத்து ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால், இவை யாவும் பகற்கனவாகவே முடியும்.
எமது தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று அமோக வெற்றி அடைவதும் உண்மை.எங்களுக்கெதிராக செயற்படுகின்ற சக்திகள் வாக்காளர்களுக்கு தையல் மெஷின்களையும் சைக்கிள்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வாக்குச் சேகரிப்பதற்கு முனைகின்றார்கள்.
எமது கட்சியை நோக்கி பலவிதமான இடையூறுகள் இத்தேர்தலில் விளைவிக்கப்படுகின்றது. அரியநேத்திரனின் ஊர்வல பேரணி மீது விஷமிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதேவேளையில், வடகிழக்கில் எந்தத்தேர்தல் தொகுதியிலும் எமது கட்சியினர் ஒரு சிறு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து எந்தவித முறைப்பாடுகளும் இல்லை என்பதைக் கூறிக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்