கல்லறையிலிருந்து பயங்கரவாதம் மீண்டும் உயிர்த்தெழ இடமளியோம் – பிரதமர்

pm.jpgநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அவசரகாலச் சட்டத்தில் எந்தெந்த சரத்துக்களை நீக்குவது என்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி தினத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேர¨ணை சமர்ப்பிக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கோரும் இறுதிச் சந்தர்ப்பமாக இருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் இந்த எதிர்பார்ப்பு எமக்கு இருந்து வந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே தொடர்ந்தும் இந்த கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடிய போது பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது :- கடந்த காலங்களில் இந்தச் சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் சபையில் ஆதரவு கிடைத்தது. இதனூடாக கிடைத்த சட்ட அதிகாரத்தினூடாக நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் நாடும் மக்களும் நன்மையடைந்துள்ளார்கள். எனினும் சிலர் குற்றம் சாட்டுவது போன்று நாம் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. எமக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றித்தான் சிந்தித்தோம்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததும் அதனூடாக நாட்டுக்கு கீர்த்தி கிடைத்ததும் இதனால்தான். சிலர் அதனை இன்று மறந்துவிட்டனர். அதனால்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னமும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின் றன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுகிள்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறான ஆயுதங்கள் சிலரது கைகளில் கிடைக்க வழிவகைகள் செய்யப்படக்கூடாது. இந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் மனதிலுள்ள அச்சத்தை போக்கவேண்டும். இதனை செய்து முடிப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமின்றி அதற்கு ஆதரவு வழங்குபவர்கள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

புலிகளுக்கு துணை போகின்ற சிலர் புலிகளின் தலைவர் மீண்டும் வரப் போகிறார் என தெரிவித்துள்ளனர். இவர்கள் இதனை எவ்வாறு செய்ய முயல்கிறார்களோ தெரியவில்லை. எனினும் பயங்கரவாதத்தை கல்லறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று பொதுமக்களை பயங்கரவாதத்தின் பால் தள்ளிவிடுவதற்கும் நாம் தயாரில்லை. நாம் இவ்வாறு செயற்பட்டாலும் பயங்கரவாதத்தை போஷிக்கின்ற சக்திகள், துணை போகின்ற சக்திகள் எமது நாட்டில் இல்லாமலில்லை.

அண்மையில் அமெரிக்காவிலும் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்திருந்தார்கள். மும்பாய் தாக்குதலுக்கு உரிமைகோரும் அமைப்பொன்று தெற்காசிய வலயத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தது. வங்காளதேசம், நேபாளம், மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த பயங்கரவாதத்தின் நிழல்கள் பரவி வருகின்றமையும் தெரிய வந்துள்ளது. அத்துடன் புலிகளின் நிழல்களும் தமிழ் நாட்டுக்குள் உலவி வருவதாக இந்திய பாதுகாப்பு துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே இவற்றை மிக எளிதானதாக எடுத்துக்கொள்ள முடியாது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல ‘பயங்கரவாதம்’ என்ற சொல் அகராதியிலிருந்தே நீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமது உரிமைகளை அனுபவித்து வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *