பரந்தனில் 300 குடும்பங்கள் இன்று மீள் குடியேற்றம்

lankaidsleavingcamp.jpgவவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம சேவகர் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 300 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர். பரந்தன் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் மற்றும் மதியாமடு கிராமங்களிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட ஏனைய நிவாரணக் கிராமங்களிலிருந்து 300 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 300 குடும்பங்களுக்குரிய நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு பஸ் வண்டிகள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவில் 08 கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மக்கள் மீளக்குடியமர்த்தப் பட்டுள்ளனர். வவுனியாவில் தற்போது எட்டு நிவாரணக் கிராமங்களே இயங்குகின்றன. இவற்றில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி (வலயம் 1), இராமநாதன் (வலயம் 2), அருணாசலம் (வலயம் 3), வலயம் 4, வலயம் 5,வலயம் 6, தர்மபுரம் ஆகிய நிவாரணக் கிராமங்களிலேயே தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். 180 நாட்களுக்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் நடைபெறுவதாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் அடுத்த வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். பரந்தன்,  உமையாள்புரம் குமரபுரம் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • sasi
    sasi

    நம்புங்கள் இந்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்டு நிம்மதியாக வாழ்வர் இதைநாம் எல்லோரும் மகிழ்வடைவோம் இனிமேல் பயங்கரவாதம் நாட்டில் தலை தூக்காது உறுதி கொள்வோம்

    Reply