இலங் கையில் வாழும் சகல சமூகத்தினதும் அங்கீகாரத்தைப் பெற்ற நானே நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்றுக் காலை அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வடக்கு, தெற்கு என்றில்லை அனைவரும் எனது மக்களே. சகல மக்களினதும் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு”. இந்த வகையில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அவர்களும் வாக்களிப்பதற்கான உரிமையைக் கொண்டவர்கள்
நாட்டின் அபிவிருத்தியே எமது பிரதான இலக்கு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து நாம் மக்கள் ஆணையைப் பெற்றோம். மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் பத்தாண்டு திட்டமாக அதனை முன்னெடுப்பதே எமது நோக்கம்.
வதந்திகள், சேறு பூசுதலை பெருவாரியாகக் கொண்டதாகவே இம்முறை தேர்தல் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். இதற்கான திட்டமிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. எம்மைப் பொறுத்தவரை எவருக்கும் சேறு பூச வேண்டிய அவசியம் எமக்கில்லை.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் அபிவிருத்தி தொடர்பாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றவும் என்னால் முடிந்துள்ளது. இது எமக்கான பெரும் வெற்றியாகும். மக்கள் எம் பக்கமே உள்ளனர். மக்கள் எமக்கே தமது ஆதரவை வழங்குவர். நாம் நூற்றுக்கு 95 வீதம் என்ற ரீதியில் வெற்றி பெறுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.