பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோதிலும் எமது பொருளாதார வளர்ச்சியை இவ்வருடம் 3. 5 சதவீதமாகப் பேண முடிந்ததாக நிதி, அரச வருவாய்த் துறை அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒதுக்கீடு திருத்தச் சட்டம், மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், தாவரப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகியவற்றின் விவாதத்தை சபையில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- கடந்த காலத்தில் மேலதிகமாக அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு அரசாங்கம் முகம் கொடுத்தது. இந்நாட்டின் அரச வருவாய் ஏற்றுமதி, இறக்குமதியில் தான் தங்கியுள்ளது. உலக பொருளாதாரத்தின் வீழ்ச்சி நேரடியாக அரச வருவாயையே பெரிதும் பாதித்தது. கடந்த 30 வருட கால யுத்தமும், அரச வருவாயையே அதிகளவில் பாதித்தது.
2009ம் ஆண்டில் உலகின் பல நாடுகள் எதிர்பார்த்த அரச வருவாயைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதற்கு உலக பொருளாதார வீழ்ச்சியே காரணமாகும். தென்னாபிரிக்கா, இந்தியா, நோர்வே, வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அரச வருவாய் வீழ்ச்சி அடைந்தது.
இருப்பினும் எமது உல்லாசப் பயணத்துறை, ஆடைத் தொழிற்றுறை, சிறு தேயிலை தோட்டத் துறை போன்ற கைத்தொழில் துறைகளைப் பாதுகாக்கவென நாம் 16 பில்லியன் ரூபாவை செலவிட் டுள்ளோம்.