வவுனியா மாவட்டத்தில் 10 இடங்கள் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக்காக தயார் நிலையிலிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா வடக்கே நெடுங்கேணி உட்பட்ட ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளும் வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கன்னிக்குளம், சேமமடு, பால மடு, பன்றிக்கெய்தகுளம், இரணைக் குளம், ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை உள்ளிட்ட பத்து இடங்களே மீள்குடியேற்றத்துக்கு தயாராகயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மீளக் குடியர்த்தப்படுவோருக்கு வாழ்வாதார தொழிலை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் பெரும்போக பயிர்ச் செய்கையில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் வவுனியா அரச அதிபர் சுட்டிக் காட்டினார்.
நிவாரணக் கிராமங்களில் 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் இருந்த இடத்தில் தற்போது ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரே இருக்கின்றனர். மீள்குடியேற்றம் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தல் என நாள்தோறும் மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் வரையான மக்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியில் செல்கின்றனர் என்றார்.