அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவதாக இருந்த ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு தொடர்பான ஆய்வரங்கக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழறிஞர்களும், ஆய்வாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கூடுதல் அவகாசம் கிடைத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பெரும்பாலானோர் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கி அளிக்கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவும் வசதியாக 2010 ஜனவரி இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 2010 ஜுன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நடைபெறத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.