செயல்பாட்டு அரசியலில் ஈடுபடாமல் பெயரளவில் இருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துச் செய்யும் வகையில் பாராளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நேற்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத் துவதற்கு ஏதுவாக இந்தச் சட்டமூலம் வழிவகுக்குமெனத் தெரிவித்தார்.
விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கட்சிகள் பெருகிவிட்டன. சுமார் 60 கட்சிகள் இருந்தும் 15 மட்டும்தான் செயற்படுகின்றன.
அரசியல் கட்சியொன்று நான்கு வருடங்கள் அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்றியிருப்பதுடன், கட்சியின் யாப்பு, நிர்வாகிகள், கணக்காய்வு அறிக்கை, விளக்கம் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலாவது போட்டியிட்டிருக்க வேண்டும். என்று தெரிவித்த அமைச்சர் வர்ணபால.
“அரசியல் கட்சிகளை பன்முகப்படுத்துவதற்குப் போதுமான ஏற்பாடுகள் தற்போதைய சட்டத்தில் இல்லை. கட்சிகளின் கூட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்த இந்த 1981ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் போதுமானதாக இல்லை. கட்சிகளின் அமைப்பை மேம்படுத்த, குறைபாடுகளை நீக்க வேண்டும்.
இது தொடர்பாக ஆராயவென 2006ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 32 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு பொருத்தமான திருத்தங்களைச் சமர்ப்பித்துள்ளது” என்றதுடன், “சில அரசியல் கட்சிகள் இனவாத ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் செயற்படுகின்றன. சில பிராந்திய மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கட்சிகளை பன்முகப்படுத்தி ஒற்றுமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் கட்சிகள் தாக்கங்களை ஏற்படுத்தி வந்தன. ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் இருக்கின்றது. இந்திய அரசியலமைப்பு முறையில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றது. எமது நாட்டில் கட்சிப் போட்டி மிகவும் அதிகமாக உள்ளது. இது புதுவிதமான அரசியல் பரிமாணங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள கட்சிகளில், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் கூட உள்ளன. இவை ஜனநாயக முறைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. அரசியல் முறைமைக்கு ஸ்திரமற்ற நிலையையே இவை ஏற்படுத்துகின்றன.” என்றும் கூறினார்.