எதிர்க் கட்சியினர் சபையில் சமர்ப்பிக்கவிருந்த பத்து நிமிட அறிக்கையொன்றுக்கு ஆளுந்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 20 நிமிடங்கள் சர்ச்சை ஏற்பட்டது. குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு காலம் தாமதித்துச் சமர்ப்பித்ததால், அதனை சபையில் முன்வைக்க அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா, 20 நிமிடங்கள் தாமதமாகி குறித்த அறிக்கையைப் பல்வேறு கேள்வித் தொடர்களைக் கொண்டதாகக் கையளித்திருப்பதால் அதனை இன்று (24) (நேற்று) சமர்ப்பிக்க முடியாதென அமைச்சர் குணவர்தன மறுப்பு தெரிவித்தார்.
அமைச்சரின் கூற்றை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. நாளைய தினம் (இன்று) அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இதனால் ஆளுந் தரப்பினருக்கும் எதிர்க் கட்சியினருக்குமிடையில் சுமார் 20 நிமிடம் சர்ச்சை உருவானது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இல்லை கேள்விக் கணைகளைத் தொடுக்கவில்லை. ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டுள்ளோம். ‘ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கிய நிலையிலிருந்து, 900 கோடி நட்டமடையும் அளவுக்குச் சென்றது ஏன்? என்றுதான் கேட்கிறோம்” என்றார்.
இதன்போது குறுக்கீட செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்தடிச்சாட்டில், அந்த அறிக்கையில் உள்ள கேள்வியைக் கூறிவிட்டார். அவர் சபையைத் தவறாக வழிநடத்துகிறார். இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.
இவ்வாறு மாறிமாறி ஒழுங்குப் பிரச்சினைகளும், தர்க்கங்களும் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. ஈற்றில், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதில் பெற்றுத்தர முடியுமென்று தெரிவித்த அமைச்சர் தினேஷ், இவ்வாறு முறைகேடாக ஜோசப் மைக்கல் பெரேரா செயற்பட்டால் எதிர்க்கட்சித் தலைவரின் சார்பில் கேள்வி கேட்க அவரை அனுமதிப்பது தொடர்பாக மீள் பரிசீலணை செய்யவேண்டி வருமென்றும் எச்சரித்தார்.