தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இ.தொ.கா. உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 405ரூபா சம்பளத்தைப் பெறுவார்கள்
பரமேஸ்வரன்
தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்து பன்னிரண்டு நாட்களின் பின்னர் முடிவொன்று எட்டப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களது சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை வலியுறுத்தி மலையகத்தில் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடு பட்டதுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். சம்பள உயர்வுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இதுவரை மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளையடுத்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக முக்கிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
தொழிலாளர்கள் கோரிய ஐநூறு ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் உடன்படவில்லை. நானூற்று ஐந்து ரூபா சம்பளத்தை வழங்கவே முதலாளிமார் சம்மேளனம் உடன்பட்டுள்ளது. இழுபறி நிலையைத் தொடர்ந்து இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்திருக்கும் சம்பளத் திட்டத்தை தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை நிராகரித்திருந்த போதிலும் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த காரணங்களின் நியாயத்தன்மையைக் கருத்திற் கொண்டே இணக்கப்பாடு எட்டப்படும் நிலைமை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இத்தகைய நிலையில் பெருந்தோட்டங்களில் நடைபெற்ற ஒத்துழையாமைப் போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சில தோட்டங்களில் போராட்டம் தொடருவதாக தகவல்கள் வருகின்றன. எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை சில தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லையெனத் தெரிகிறது.
பெருந்தோட்டத் துறையைப் பொறுத்த வரை இன்றைய காலகட்டம் மிகவும் முக்கியமானது. தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு இருநூற்றுத் தொண்ணூறு ரூபாவையே சம்பளமாகப் பெற்று வந்தனர். தற்போது நாளொன்றுக்கு 115 ரூபா அதிகரிப்புக் கிடைத்துள்ளது. நாற்பது சதவீத சம்பள அதிகரிப்பாக இதனைக் கொள்ளலாம்.
நியாயமான சம்பள உயர்வைப் பெற்று விடுவதென்பது தொழிலாளர்களினதும் மலையகத் தொழிற்சங்கங்களினதும் உறுதிப்பாடாக இருந்ததன் காரணமாகவே தோட்டத் தொழிலாளரை ஓரளவாவது திருப்திப்படுத்தும் வகையிலான சம்பள உயர்வொன்று இம்முறை எட்டப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் ஒருமித்த செயற்பாடும் இதற்குக் காரணமாகும். சம்பள விவகாரத்தில் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதில் அரசாங்கம் மேற்கொண்ட பங்களிப்பும் முக்கியமானது. அதனாலேயே இழுபறி நிலைமை முடிவுக்கு வந்தது
அரசாங்கம் இவ்விடயத்தில் நடுநிலைமையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளருக்கு இன்றைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பையும் விருப்பத்தையும் அரசாங்கம் கொண்டிருந்தது.
அதேசமயம் தோட்டக் கம்பனிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான தீர்வொன்றுக்கு அரசாங்கம் உடந் தையாக இருந்து விடமுடியாது. எனவேதான் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் நிதானப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டியிருந்தது.
சம்பள உயர்வு விடயத்தில் எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற போக்கையும் இவ்விடயத்தில் சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வீணான கொந்த ளிப்பை உருவாக்குவதுடன் மலையகத் தொழிற் சங்கங்களுக்கிடையே இன்றைய நிலையில் கருத்து வேற்றுமைகளையும் தோற்றுவிக்க எதிர்க்கட்சிகள் முற்பட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன. இத்தகைய போக்கு பொறுப்பற்றதாகும். தொழிலாளர்களுக்கும் கம்பனிகளுக்குமிடையே விரோதத்தை ஏற்படுத்துவதால் எதிர்காலத்தில் வீணான நெருக்கடிகளே உருவாகும். அது மாத்திரமன்றி தேயிலை உற்பத்தித் துறையை வீழ்ச்சிக்குக் கொண்டு வர வைப்பதற்கும் எதிர்க் கட்சிகளின் முயற்சிகள் வழிவகுக்கக் கூடும்.
இவ்விடயத்தில் மலையகத் தொழிற்சங்கங்க ளும் தோட்டத் தொழிலாளர்களும் எப்போதும் நிதானப் போக்குடன் நடந்து கொள்வது அவசி யம். குழப்பமான நிலைமையை ஏற்படுத்தும் சதிமுயற்சிகளுக்கு தொழிலாளர்கள் பலியாகி விடக்கூடாது.
தேயிலைத் தொழில்துறை சில காலமாக வீழ்ச்சியடைந்திருந்தது. உற்பத்தி வீழ்ச்சியடைந்தமை ஒருபுறமிருக்க சர்வதேச சந்தையில் விலையும் சரிந்ததனால் இப்பாதிப்பு ஏற்பட்டது. தேயிலைத் தொழில்துறை தற்போது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை தோட்டத் தொழிலாளர்கள் முதுகெலும்பாவர். அவர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் தேயிலைத் தொழில்துறையை மீண்டும் உச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கோரிக்கைகளை வென்றெடுப்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வரவுக்கான விசேட அலவன்ஸாக 85 ரூபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கும், மேற்படி ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு 2011 மார்ச் வரை அமுலில் இருக்கும். அதேவேளையில் 2006ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் இருந்து இணக்கம் காணப்பட்ட சம்பள நிலுவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தற்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவும் நாணய மாற்று விசேட கொடுப்பனவாக 20 ரூபாவும் மாதத்தில் 75 சதவீத வேலைக்கு சமுகமளித்திருந்தால் நாளொன்றுக்கு 70 ரூபாவுமாக மொத்தமாக 290 ரூபாவைப் பெற்று வந்தனர்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே மேற்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தன. இதுவரை சம்பள உயர்வு தொடர்பாக 8 சுற்று பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் நடத்திய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பொழுதும் நேற்று மீண்டும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாகவே 405 ரூபா எனும் தொகையை நாளொன்றுக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சார்பில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்க முடியாதெனத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் நேற்றுக் காலையில் நாளொன்றுக்கு 390 ரூபா அளவிலேயே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது அடிப்படைச் சம்பளமாக 275 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 100 ரூபாவும் திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 15 ரூபாவும் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருந்தது. இதற்கிடையில் இந்த அறிவிப்புடன் ஒத்துழைக்க போவதில்லை என கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய தொழில் சங்கங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
500 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய போதும், தற்போ இந்த தொகைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த தொழில்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுவரையில் இவ்வாறான எந்த ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அதன் பின்னரே தமது தீர்மானத்தை வெளியிட முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தொட்டத்துறை தலைவர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
1977 ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சியை கைப்பற்றியதும் வகை தொகையின்றி சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் வெளிநாடுகளுக்கு (மத்திய கிழக்கு நாடுகள்) ‘ஹவுஸ் மெய்ட்’ என்ற பெயரில் வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றனர். இதன் காரணமாக சிங்கள கிராமப்புறங்களைச் சேர்ந்தோர் ஆயா வேலையை துறந்து வெளிநாடுகளை நாடத் தொடங்கினர். இதேவேளை ஐ. தே. கட்சியின் திறந்த பொருளாதார நடவடிக்கையால் மலையக பெருந்தோட்ட மக்களும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டதுடன், இடை இடையே நிலவிய இன கலவரத்தாலும் பெரிதும் இன்னல்களை அனுபவித்தனர். சிங்கள கிராமத்து பெண்கள் கொழும்புக்கு தொழில் புரிய வருகை தருவது குறைந்ததும், கொழும்பில் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தோர் மலையக பெண்களை முதலாளிகளின் வீட்டு வேலைகளுக்கு வழங்க முன்வந்தனர்.
இதன் காரணமாக கூன் விழுந்து போன தங்களின் வாழ்க்கையை தோட்டத்திற்கு வெளியே சென்று நிமிர்ந்துக்கொள்ள ஆசைப்பட்டு தரகர்களின் ஆசை வார்த்தைகளை நம்பினர். இதன் தொடர்கதையே இன்று பத்து மாதம் சுமந்து பெற்ற பிஞ்சுகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் பரிதாபம் மலையகத்தில் தொடர்கிறது. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள் என்பது வெறும் அலங்கார வசனம் அல்ல. தேயிலைச் செடி மலைகளில் கொழுந்துக் கூடையை முதுகிலும் வயிற்றில் குழந்தையையும் சுமந்து காடு மலையேறி கொழுந்து பறித்து வாழ்க்கை நடத்துபவளே பெருந்தோட்டப் பெண்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது. வயிற்றில் தன் குழந்தையையும், முதுகில் கொழுந்துக் கூடையையும் சுமக்கும் பெருந்தோட்டப் பெண்கள் வறுமையின் வலியையும் சுமக்கிறார்கள். வறுமையின் நிறம் சிவப்பு என்பது மலையக பெருந்தோட்டப் பெண்களுக்கே தெரியும்