செனல்-4 வீடியோ காட்சிகள் குறித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண, சட்டத்தரணி மொகான் பீரிஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சத்துர சில்வா மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
மேற்படி வீடியோ காட்சி தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார். இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மாநாடு ஒன்றையும் ஏற்கனவே அமைச்சர் நடத்தியிருந்தார்.
வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார ஆகியோர் விசாரணை நடத்தி அமைச்சரிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.
அந்த அறிக்கை மூலம் கிடைத்த தகவலின்படி, இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டவை என்றும் கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் அமைச்சுத் தரப்பில் கூறப்பட்டது.