திருநெல்வேலியில் 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து, 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மற்றும் தாழையுத்து பகுதிகளில் மீனா என்ற இளம்பெண் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு மாயமாகி விட்டார்.
மேலும் அவர் பல வீடுகளி்ல் வேலைக்கு சேர்ந்து உரி்மையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று பிறகு அவர்கள் கண் அயரும் நேரத்தில் நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது போலீஸில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து மீனாவை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விஎம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மீனா நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனார். அப்போது மீனா, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் போலீஸாரிடம் கூறுகையில், இதுவரை 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்தேன். தற்போது பணம் காலியானதை தொடர்ந்து விஎம் சத்திரத்தில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர வந்தேன் என்றார்.
போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர். மேலும், 35 பவுன் நகைகளை விரைவில் மீட்க இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.