ஹைதராபாத் வந்து சேர்ந்தது ராஜசேகர ரெட்டி உடல்

02-rajasekara-reddy.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. அவருடன் பயணித்த நால்வரின் உடல்களும் கூட ஹைதராபாத் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்று காலை மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரெட்டி உள்ளிட்ட ஐவரின் உடல்களும் கருகிப் போயிருந்தன. இதையடுத்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கின. பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஐவரின் உடல்களும் சேகரிக்கப்பட்டு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகலில் கர்னூல் கொண்டு வரப்பட்டன.

கர்னூல் மருத்துவமனையில் ஐந்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதலில் ரெட்டியின் உடலுக்கான பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்தது.

கர்னூல் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் ராஜசேகர ரெட்டியின் உடல் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் ரெட்டியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஏற்றப்பட்டு விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை உடல் வைக்கப்படும். ஹைதராபாத்தில் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்தவுடன் ரெட்டியின் உடல் அவரது சொந்த மாவட்டமான கடப்பாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்குள்ள ரெட்டி பிறந்த ஊரான புலிவெண்டுலுவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆந்திராவில் 7 நாள் அரசு முறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *