பிலியந்த லையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
விளையாடுவதற்குப் பட்டம் ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறி ஆசைகாட்டி மேற்படி சிறுவனை இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். பிலியந்தலை இல. ஒன்று சிங்கள கனிஷ்ட பாடசாலையில் கல்வி கற்றுவரும், பெத்தும் மினிந்த எனும் 9 வயது சிறுவனே நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
சம்பவ தினத்தன்று, பிலியந்தலை கனேவத்தை தேவாலயத்தில் பிற்பகல் வேளையில் தனது நண்பர்களோடு பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, தேவாலயத்தில் கூலி வேலை செய்வதற்காக வந்திருந்த இருவர் பட்டம் வாங்கித் தருவதாகக் கூறி சிறுவனை பிலியந்தலை நகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விளையாடச் சென்ற சிறுவன் மாலையாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சிறுவன் கடத்தப்பட்ட விடயம் வெளியானது.
தொலைக்காட்சிச் செய்தியில் சிறுவனது புகைப்படத்தைப் பார்த்த ஆட்டோ சாரதி ஒருவர், அவரை ஒரு நபருடன் கண்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிறுவனை மீட்டதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.