அம்பாந் தோட்டை துறைமுக நிர்மாண பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த துறைமுகத்திற்கான முதலாவது இறங்குதுறையை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக தெரிவித்த அவர் 500 மீற்றர் தூரம் வரை இறங்குதுறை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நாரஹேன்பிடியிலுள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில்,
கொழும்பைப் போன்று கிராமப் புறத்தையும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2011ம் ஆண்டு இறுதியிலே இந்த துறைமுக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனினும், தமது இலக்குக்கு முன்னரே தற்பொழுது வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.
39,080 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிர்மாண பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன. இவற்றில் 33,218 மில்லியன் ரூபாவை சீன அரசு நிதியுதவியாக வழங்கி யுள்ளது என்றார். 2010ம் ஆண்டு டிசம்பரில் பணிகளை பூர்த்தி செய்து விட்டு நீரை உள்வாங்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.