மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவர் கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்தக்கோரி மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சிறுமிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு திகாம்பரம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; குடும்பத்தின் வறுமைகாரணமாக கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமிகள் இருவர் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பேரதிர்ச்சியைத்தருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக தாம் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மரணமான சிறுமிகளின் பெற்றோர் எமது கவனத்துக்கொண்டு வந்துள்ளனர். கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் யுவதிகள் இளைஞர்கள் சொல்லொணா துயரங்களுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கல்விகற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு தோட்டப்பகுதி சிறுவர்களை வெளிமாவட்டங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், முள்ளுகாமத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு சிறுமிகளின் மரணமானது, முழு மலையக தமிழ் சமூகத்துக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது வறுமையைப்போக்கிக் கொள்வதற்காக தலைநகரம் சென்ற சிறுமிகளின் இந்தப்பரிதாபகரமான நிலைமைக்கு யார் காரணம், என்பதை கண்டறிந்து சட்டத்துக்கு முன்நிறுத்துவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு இவ்வாறு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில், மஸ்கெலியா பிரதேச பொதுமக்கள், மலையக சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.