இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; டெஸ்ட் தொடர் சமநிலை

cricket.jpgஹெடிங் லேயில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 4-வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 343 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிக்ஸில் 263 ரன்களுக்கு சுருட்டி, 80 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மிட்செல் ஜான்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் 5 டெஸ்ட்கள் கொண்ட இத்தொடர் தற்போது 1- 1 என்று சம நிலை எய்தியுள்ளது. 82/5 என்று துவங்கிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு சற்று பிறகு 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி தழுவியது.

82/5 என்று துவங்கிய இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 250 ரன்களை எட்டியது. அதாவது 168 ரன்களை அந்த இரண்டு மணி நேர ஆட்டத்தில் குவித்தது இங்கிலாந்து.

8-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரகாம் ஸ்வானும், ஸ்டூவர்ட் பிராடும் 12.3 ஓவர்களில் 108 ரன்களை மின்னல் வேக அதிரடியில் குவித்தனர். எந்த ஒரு விக்கெட்டுக்கும் இடையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வேகத்தில் ரன் குவித்திருப்பது இதுவே இரண்டாவது அதிகபட்சமாகும். முதலில் நேதன் ஆஸ்ட்லேயும், கிறிஸ் கெய்ன்சும் ஜோடி சேர்ந்து இதைவிட வேகத்தில் ரன் குவித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்டிலும், கெய்ன்ஸும் 10-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 65 பந்துகளில் 118 ரன்களைக் குவித்துள்ளனர். இதுதான் அதிகபட்சம். தற்போது பிராட், ஸ்வான் பார்ட்னர்ஷிப் 8.64 என்ற ரன் விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இவர்கள் அதிரடியில் சிக்கியவர் ஸ்டூவர்ட் கிளார்க் இவர் 11 ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. நேற்று முதலில் ஜேம்ஸ் ஆன்டர்சன் வந்தவுடனேயே ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஸ்கோர் 120 ரன்களாக இருந்தபோது மேட் பிரையர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 120/7 என்று ஆனபோது ஸ்வானும், பிராடும் இணைந்தனர். முதலில் ஸ்வான் திணறினார். அதிர்ஷ்டவசமாக இரண்டு பவுண்டரிஅகளை அடித்தார். ஆனால் ஸ்டூவர்ட் கிளார்க் பந்தில் பிராட் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.

அடுத்ததாக இரண்டு 5 ரன்கள் வைடு பால் வீசிய சிடில் அதே ஓவரில் 17 ரன்களை கொடுத்தார். பிராட் அரை சதம் நோக்கி முன்னேறினார். மீண்டும் ஸ்டூவர்ட் கிளார்க் ஓவரில் 16 ரன்கள் இந்த முறை அவரை விளாசியது கிரகாம் ஸ்வான்.

அதன் பிறகு 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசிய பிராட், பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.72 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 62 ரன்கள் எடுத்து ஸ்வான் ஆட்டமிழந்தார். ஹார்மிசன் களமிறங்கி 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்து ஜான்சனிடம் ஆட்டமிழந்தார். கடைசியாக இன்னிங்ஸின் 62-வது ஓவரின் 3-வது பந்தில் கிரகாம் ஆனியன்ஸின் ஸ்டம்ப்களை ஜான்சன் பெயர்க்க பாண்டிங் பின்பு கூறிய “நம்பமுடியாத” வெற்றியை ஆஸ்ட்ரேலியா 3 நாட்களுக்குள் பெற்றது.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த ஆஸ்ட்ரேலிய வீரர் மார்கஸ் நார்த் தேர்வு செய்யப்பட்டார்.ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் 5 விக்கெட்டுகளையும் ஹில்ஃபென் ஹாஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *