இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்க நாணய நிதியம் அங்கீகாரம்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இதற்கான அங்கீகாரத்தை நேற்று வழங்கியுள்ளது. முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவி புரிந்து பொருளாதார நிலையை வலுப்படுத் தும் முகமாக இலங்கைக்கு இந்தக் கடன் வழங்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. இதனையடுத்து 2.5 பில்லியன் டொலராகக் கடனை அதிகரித்து வழங்குவதெனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வொஷிங்டனில் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை, 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இலங்கை நேரப்படி நேற்று (25) அதிகாலை வெளியானது. இலங்கைக்கு இந்தக் கடனை வழங்குவது தொடர்பாக நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும், பதில் தலைவருமான டக்காரொஷி கட்டா, உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீள்வதற்கு இந்தக் கடன் உறுதுணை புரியுமென்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்கும் நிவாரணங்களுக்குமான வளங்களைப் பெற்றுக் கொள்ளவும், சர்வதேச கையிருப்பை மீளக்கட்டியெழுப்பி இலங்கையின் உள்ளகப் பொருளாதார முறைமையை வலுப்படுத்தவும் இந்தக் கடன் ஏதுவாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்கியமை நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், மேம்பாட்டுக்கும் வழிவகுக்குமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் அமிர்தலிங்கம் தெரிவித்தார். இதன்மூலம் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை நிவர்த்தியாக செல்மதி நிலுவை உறுதியாக்கப்படுமென்று அவர் சுட்டிக்காட்டினார்

விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன.

நாணய நிதிய வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை

இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை இரவு அங்கீகாரம் வழங்கியிருக்கும் அதேசமயம், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வெற்றியடைவதற்கு இலங்கையின் அரசியல் சூழ்நிலை நெருக்கடியானதாக இருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன், முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

சமூக மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனுசரணையான இந்தக்கடன் வழங்கும் திட்டமானது இராணுவ பலவீன ஒதுக்கீட்டிற்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பிரிட்டன் கவனிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி “ரைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் அகதிமுகாம்களுக்கு இந்த நிதியை செலவிடுமாறும் பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் 5 சதவீத வாக்களிக்கும் உரிமையை பிரிட்டன் கொண்டுள்ளது. 51 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பிரேரணையை நிறைவேற்று சபை நிறைவேற்ற முடியும். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ளதால் சமாதானத்தை இலங்கை எட்டமுடியுமென்று சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.

இலங்கை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில்,”சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டிற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கவில்லை. இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று பிரிட்டன் கருதுகிறது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கை நீண்டகால சமாதானம், சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது. ஆயினும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் கவலையடைத்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டம் அவசியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குயமர்த்தும் விரிவான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென்று ஐ.நா. அண்மையில் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். சாத்தியமான அளவுக்கு அந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல இடமளிக்க வேண்டும். இதனைத் தாமதமின்றி நடை முறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

இதன் அடிப்படையில் இலங்கை தற்போதைய அரசியல் நிலைவரம் கடினமானதாக இருப்பதாக நாம் நம்புகிறோம். நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலைமை கடினமானதாக உள்ளது. மனிதாபிமான நிலைவரம் கரிசனைக்குரியதாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. 180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • chandran.raja
    chandran.raja

    மருதாயி வயது முப்பது அல்லது முப்பைதைந்து இடைப்பட்டிருக்கலாம். சிட்டு மகள் வயது இருபது. அவளுக்கு ஒரு கைக்குழந்தை வயது மாதக்கணக்கில் நான்கு. ஆறுமாதங்களுக்கு முன்பு தான் சிட்டுவும் தன்குழந்தையுடனும் தற்கொலை செய்து கொண்டார்கள். காரணம் பால்மாவுக்கு காசில்லை. மருதாயும் கையை விரிச்சாள். சிட்டுவின் இறுதி முடிவைப் பற்றி மருதாயி அறிந்திருக்கவில்லை. செல்வத்தை தேடித்தந்த ஒரு கூட்டம் மக்கி உழுத்து நிலத்திற்கு உரமாக மாறிபோய்யிற்று. உழைப்புக்கேற்ற ஊதியத்தை அவர்கள் அடைத்ததே இல்லை. அவர்களும் தமிழ்மக்கள் தான்.
    ஒரு சின்ன உதாரணம் என்றாலும் சிந்திக்கவேண்டிய விஷயம். முப்பது வருட உள்ளாட்டு யுத்ததிலும் சிட்டுவையும் குழந்தையும் காப்பாற்றுவதற்கு தேவையான செலவு ஒரு தோட்டாவின் செலவே!.

    சரிவிஷயத்திற்கு வருவோம். கணக்குவழக்கு வரவுசெலவுகளைப் பற்றி அறியாத கேட்க துணிவில்லாத மனிதராக பழக்கப்படுத்தி விட்டோம். எமக்காக வந்த பணம் திரும்ப எவ்வளவு? தனிப்பட்ட பெயரில் வெளிநாட்டுக்கு போகுது என்பதை யாம் அறியோம். அடைவுவைத்த பணத்தில் ஐம்பது சதவீதத்தையாவது இலங்கைமக்கள் பயன் அடைந்தால் சந்தோஷமானதே! மகிந்தாவிடம் நிச்சயம் ஐம்பத்துஒருவீதத்தை எதிர்பார்கலாம்.
    நுhறு வீதத்தை எப்போது எதிர்பார்பது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    மருதாயி , சிட்டுக்கெல்லாம் பால்மா கொடுக்க உலகவங்கியிடம் கையேந்தும் நிலையிலா ‘இறையாண்மையுள்ள’ ஸ்ரீலங்கா இருக்குது? தமிழ் பெண்களுக்கு என நீங்கள் கதை விட்டு நியாயப்படுத்துங்கோ…சிங்களப் பெண்களுக்கு என அவையளும் முஸ்லீம் கைக்குழந்தைகளுக்கு என மற்றக்கோஷ்டியும் கதை விடட்டும். எல்லாத்துக்கும் மேலால இன ஐக்கியம், இறையாண்மை , வாழ்வுக்குடுத்தல் என இன்னொரு கோஷ்டி!……………

    Reply
  • சங்கர்சன்
    சங்கர்சன்

    ‘….மகிந்தாவிடம் நிச்சயம் ஐம்பத்துஒருவீதத்தை எதிர்பார்கலாம்…..

    ஓ…அதுதானா உலகவங்கி எக்ஸ்ராவாக 600 மில்லியன் கொடுத்திருக்கு. கேட்டது 1.5பில்லியன் அதில கொஞ்சம் அடிப்பாங்கள் எண்டு தெரிஞ்சு போச்சு. சோ…எக்ஸ்ரா 600 மில்லியன்.
    உலகவங்கியை ஏகாதிபத்திய கைக்கூலிகள் என்ச் சொல்லும் கூட்டம் எங்கே சென்றது?
    மாறாக வாங்குபவர்கள் கயவர்கள் எனத் தெரிந்தும் அள்ளிக்கொடுக்கும் வள்ளல்கள் என்பதனை இனியாவது ஏற்றுக்கொள்ளுங்கள்!

    Reply
  • msri
    msri

    இலங்கை வெளிவிவகார அமைச்ரின் சொகுச வாழ்க்கைக்கு> இலங்கை அரசு இன்னொரு கடன் வாங்கவேண்டும்! இவரின் கடநத சில மாதப் பிரயாணங்களுக்கு (உத்தியோகப்பற்றற்ற)மட்டும் 3.5 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது! அமெரிக்காவில் நடைபெற்ற இவரின் மகளின் பிறந்ததினத்திற்கு 44ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது! இலங்கை அரசு உலகில் கடன்படும் தொகை> எம்நாட்டு மக்களை வாட்டி வதைப்பதன் மூலமே கொடுபடும்! மக்கனள வாட்டிவதைக்கும் நிபந்தனைகளையே கடன் கொடுப்பவர்களும்> கொடுப்பார்கள்! மாறிவரும் அரசுகள் சொகுசு வாழவுடன்> மக்களை கடனாளிகளாகவும்> அவர்களை வாட்டிவதைத்துமே அரசியல் நடாத்தினார்கள்! நடாத்துவார்கள்! இது முதலாளித்துவத்தின் சர்வவியாபகத் தன்மை!

    Reply