பாகிஸ் தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸுக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார ஆகியோருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. அத்துடன் காயத்தினால் அவதிப்பட்டு வந்த முத்தையா முரளிதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டனர்.
இதில் காயத்துக்கு உள்ளாகியுள்ள அதிரடி ஆட்டக்காரர் டி.எம்.டில்ஷான் சேர்க்கப்படவில்லை. பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உபுல் தரங்க மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முடிவடைந்த பாகிஸ்தானுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான சமிந்த வாஸ் வரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரை இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
எனினும் அவருக்கு தொடர்ந்து இலங்கை ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. வாஸ். எஸ்.எஸ்.சி. டெஸ்டில் ஒரு விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 32 வயதான திலன் சமரவீர இலங்கை ஒருநாள் அணியில் இணைக்கப்படுவது நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அவர் கடைசியாக 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதேபேõன்று சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார அணிக்கு திரும்புவது இரண்டு ஆண்டுகளின் பின்னராகும்.
இது தவிர, ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பார்வீஸ் மஹ்ரூபிற்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் தம்புள்ளையில் வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அணி விபரம்
சங்கக்கார (தலைவர்/வி.கா), முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, சாமர கபுகெதர, அன்ஜலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, லசித் மாலிங்க, அஜந்த மெண்டிஸ், திலின கண்டம்பி, மாலிங்க பண்டார, திலான் துஷார, இஸுரு உதான, உபுல் தரங்க.