பாதாள உலகக் கோஷ்டியினரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் தலைமைக் காரியாலயத்திலுள்ள குற்றவியல் தொடர்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடமோ சரணடையுமாறு பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற ரட்ட யன எத்த எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பாதாள உலகக் கோஷ்டியினரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், இதன்போது பொலிஸார் எத்தகைய அழுத்தங்களுக்கும் உட்பட மாட்டார்கள் எனக் கூறினார்.
பாதாளக் குழுக்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்க முடியும் எனக் கூறிய பொலிஸ் மாஅதிபர், இத்தகவல்களை பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் தலைமை அலுவலகம், கொழும்பு எனும் முகவரிக்கோ அல்லது 0112446174 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டோ அறிவிக்க முடியும் எனத் தெரிவித்தார். தகவல்களை வழங்குவோர் அவற்றைத் தமது பெயரைக் குறிப்பிட்டோ அல்லது குறிப்பிடாமலோ வழங்கலாம் என்றும் பொலிஸ் மாஅதிபர் மேலும் கூறினார்.