இரான் அரசால் கைது செய்யப்பட்ட தெஹ்ரானில் இருக்கின்ற பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்த இரான் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இரான் அதிபர் தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைக்கு இவர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஒன்பது பணியாளர்கள் பிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் எத்தனை பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார்.
இரானின் இந்த செயல் சற்றும் ஏற்க முடியாத ஒன்று என்றும் இது வம்புக்கிழுக்கும் ஒரு செயல் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறைக்கு அடித்தளமிட்டவர்கள் மேற்கத்தைய நாடுகள் தான் என்று இரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.