இடம் பெயர்ந்த வடபகுதி மக்களுக்கு அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் நிவாரணக் கிராமங்களில் நடமாடும் சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்தது.
கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் சுமார் 19 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் தினங்களில் ஏனைய நிவாரணக் கிராமங்களில் ஆள் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான நடமாடும் சேவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் நடமாடும் சேவைகள் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் பெறுவது தொடர்பாக மக்களை அறிவூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் கூறியது.பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலுடன் இந்த நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.