சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறது என சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது : இலங்கை அரசாங்கம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு அரசியல் தலையீடுகளே காரணம்.
சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னர் அரசியல் காரணிகளை முதனிலைப்படுத்திக் கடன் வழங்கவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவே கடன் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மனித உரிமை நிலைமைகளின் காரணமாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன்களை வழங்க முடியாதென மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
எவ்வாறெனினும், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளக் கூடிய சகல தகுதிகளும் எமக்கு இருக்கின்றது.” இவ்வாறு அமைச்சர் பீரிஸ் அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்