மூன்று இலட்சம் மக்கள் அகதியாகவுள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எம்மீது திணிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளோம். இந்த தேர்தல் ஊடாக அரசு யுத்தத்தின் பிற்பாடு தமிழ்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை நாடிபிடித்து பார்க்கும் ஒரு குட்டி தேர்தலாகவே இது அமைந்துள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
நகர சபைக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பேசும்போது கூறியதாவது; யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள், மனக்காயங்கள் தமிழ் மக்கள் மனதில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அமோகவெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய மீள்குடியேற்றம், தமிழ்மக்களுடைய நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பதற்காக எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும். நகர சபைக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நகர எல்லைக்குள் பல்வேறுபட்ட பணிகளை எம்மால் செய்ய உத்தேசித்துள்ளோம்.
பாராளுமன்றம் தவிர்ந்த ஏனைய நாட்களில் நாம் எமது தொகுதியில்தான் தங்கியுள்ளோம். மாவட்டத்தைவிட்டு வெளியேறவில்லை. மக்களோடு மக்களாகவே தங்கியுள்ளோம். நகர எல்லைக்குள் உள்ள வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.