வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்துச்செல்லப்படும் என இன்று டில்லியில் இலங்கை இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியால் 884 மெற்றிக்தொன் எடை கொண்ட உணவுப்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களுடன் கொழும்பு நோக்கி வந்த மேற்படி கப்பல் திருப்பியனுப்பப்பட்டது.
பின்னர் இக்கப்பல் சென்னை கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க ஆவன செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இக்கடிதத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்துசென்று, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்துக் கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இந்திய கடற்படை அதிகாரிகள், வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்திருந்தனர். இதன் காரணமாக, துறைமுக அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் தூரம் நகர்த்தி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு, பணியாளர் சிலருக்கு உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. உடனடியாக சென்னை துறைமுகக் கூட்டுத்தாபனம் குடிதண்ணீர் வழங்கியது.
இதைத் தொடர்ந்து, நேற்று டில்லி வந்த இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவினருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் கப்பல் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, இலங்கை அதிகாரிகள் குழு சம்மதம் தெரிவித்ததாக தெரியவருகிறது.
இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் சென்னையிலோ அல்லது தூத்துக்குடித் துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, இலங்கைக்கு எடுத்துச்செல்லப்படும். இதேவேளை, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வணங்கா மண் நிவாரணக் கப்பலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுமதிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
anpu
இதைப்போல ஒரு நீண்ட கடல் ட்ராமாவை நான் எங்கும் பார்க்கவில்லை.
மாயா
கப்பலை அப்பகுதியை விட்டுத் துரத்தினால் போதும் என்பதே இம் முடிவுக்கு காரணம். உடைக்கப் போன கப்பல் அமிழ்ந்து போனால் அதற்கு நிவாரணம் கொடுக்க யாரால் ஏலும்?
பார்த்திபன்
புலிகள் இலங்கை இராணுவத்துடன் வீரம் பேசி, பின்பு அவர்கள் காலடியில் விழுந்து சாதனை படைக்க, இந்தப் புலிப்பினாமிகளும் தமிழக அரசையும், மத்திய அரசையும் மிகவும் கேவலமாக விமர்சித்து, இன்று காரியமாக அவர்களின் காலடியில். மொத்தத்தில் புலியாக இருந்தாலென்ன, புலிவேசம் கட்டினால் என்ன சிந்தனைகள் எப்போதும் ஒன்றென்பதையே இவர்களது செயற்பாடுகள் காட்டுகின்றன.