கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலை – 7 மாதங்களில் சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் ஏழு மாதகாலங்களில் மீள இத்தொழிற்சாலையைக் கட்டியெழுப்புவதுடன், சீமெந்து உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் செல்வநாயகம் தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளது. இவ்விஜயத்தின் போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் நிலைமையை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர்; ஏற்கனவே அங்கிருந்த இயந்திராதிகளை மீள உபயோகிக்க முடியுமாஎன்பதையும் ஆராய்ந்துள்ளார். பயங்கரவாத சூழல் காரணமாகக் கடந்த மூன்று தசாப்த காலங்களாக மேற்படி தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததுடன் அங்குள்ள இயந்திராதிகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு முன்னர் இத்தொழிற்சாலை இயங்கியபோது வருடாந்தம் இங்கு பத்து இலட்சம் மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதுடன் அது நாட்டின் சீமெந்து தேவையில் பெருமளவை ஈடுசெய்துள்ளது.

இத்தொழிற்சாலையை மீள ஆரம்பித்து சீமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிமாவட்டங்களிலிருந்தாயினும் பெற்று தேசிய சீமெந்து உற்பத்தித்துறைக்குப் பங்களிப்புச் செய்வதே நமது நோக்கமெனவும் அமைச்சர் வெல்கம தெரிவித்துள்ளார்

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rony
    rony

    காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு தேவையான முதன்மை மூலப்பொருளான நிலக்களிமண் மன்னார் மாவட்டத்திலுள்ள முருங்கன்
    நிலத்திலிருந்துதான் அனுப்பப்படுகின்றது.ஆகவே சீமெந்து தொழிற்சாலையை ஏன் முருங்கனில் ஆரம்பிக்கக்கூடாது? அரசுக்கும் கூடிய ஆதாயம் கிட்டுவதோடு, மன்னார் மக்களுக்கும் தொழில் வாய்ப்பு அதிகரிக்குமல்லவா. சிந்தித்தால் செயல்பட இடமுண்டு.

    Reply
  • shantha
    shantha

    நிலக்கழி மண் என்னவோ மன்னார் முருங்கனில் இருந்து அனுப்பப்பட்டாலும் பருவக்காற்று தெற்கு நோக்கிவீசுகையில் சிங்கள பகுதிகள் மாசடைய நிறைய வாய்ப்பிருப்பதாக அரசு நினைத்திருக்கலாம்! மற்றது வடக்கில் சிமேந்து ஆலை ஆயிரம் பேருக்கு தொழில்வாய்பை கொடுத்தாலம் லட்சக்கணக்கான மக்களனி; வாழிடங்கள் சூழல் மாசடைதலால் பாதிக்கப்பட்டதை யாரும் உணரவில்லை. நான் இதை நேரில் அனுபவித்தவன் அது மட்டுமல்ல வடக்கில் களிமண் கிண்டய பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது!

    மன்னார் மக்களிற்கு தேவை சீமேந்து ஆலைவேலயல்ல. தரமான கல்வியுடன் சிறந்த முதலீடு. புலம் பெயர் சமூகம் நினைத்தால் தரமான பல வேலை திட்டங்களை அங்கு நிறுவ முடியும்.

    Reply
  • thevi
    thevi

    சீமெந்து தொழிற்சாலை இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்திய முதலாளிகளுக்கு விற்கப்பட்டு விட்டதே. அதனை விரைவில் இயங்க வைப்பதற்காகவும் தான் இந்த யுத்தம் வேகமாக முடித்து வைக்கப்பட்டது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சீமெந்து தொழில்சாலையின் புகைபோக்கில் இருந்து எழும்பும் புகைபோல எனக்கும் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழும்பிய வண்ணமே உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்திய நிறுவனத்திற்கு விற்பதற்கும் வாங்குவதற்கும் இந்தியா-இலங்கை தயாராகிவிட்டார்கள் என்றால் புலிகளை அழித்தொழிக்க முடியும் என்பதும் முடிவாயிற்று அப்படியென்றால் புலிகளை வாழ அனுமதித்ததும் இருநாடுகளுக்கும் பங்கும் உண்டு அல்லவா?

    எழுபதுகாலப் பகுதியிலேயே மன்னார் எண்ணவள ஆய்வில் எண்ணை இருக்கிறது இல்லை வரைபடத்தை காணவில்லை என்ற சந்தேகங்களை பத்திரிக்கைகளும் இடதுசாரிகளும்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் மூன்று தகாப்திற்குப் பிறகு புலிகளின் வாழ்வும் சாவுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது போல காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன இது “உன் எதிரி உன்நாட்டிலிலேயே உள்ளான்” என்ற மாபெரும் தத்துவத்தை நினைவு படுத்தவில்லையா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    rony,
    சீமேந்து தயாரிப்பிற்குத் தேவைப்படும் மூலப்பொருட்களில் ஒன்றான ஒருவகைக் களிமண் மாத்திரம் தான் முருங்கனில் கிடைக்கின்றது. அதுபோல் முக்கிய மூலப்பொருளான ஒருவகைச் சுண்ணாம்புக்கல் காங்கேசன்துறையில் கிடைக்கின்றது. சீமேந்துத் தொழிற்சாலை ஏதோ தமிழ்ப்பகுதியில் மட்டும் சூழல் மாசுபடுத்துகின்றதென்று சிலர் நினைக்கின்றார்கள். சிலாபம், கொழும்பு போன்ற பகுதிகளிலும் சீமேந்துத் தொழிற்சாலைகள் உள்ளன.

    thevi,
    இந்தியத் தனியார் நிறுவனம் ஒன்று காங்கேசன்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையை குத்தகைக்கு எடுக்கவிருப்பதாகவே முன்பு தகவல் வந்ததேயொழிய விலைக்கு வாங்குவதாக அல்ல. ஆனால் பின்பு ஒன்றுமே நடைபெறவில்லை. இப்போ அரசே அதனை மீள இயங்க வைப்பது என்றால், பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். காரணம் காங்கேசன்துறையில் முன்பு இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலையுடன், இன்னொரு புதிய தொழிற்சாலையும் பெரிதாக 80 களில் கட்டினார்கள். அநேகமாக இரண்டையுமே மீள இயங்க வைப்பார்கள் எனவே நம்புகின்றேன்.

    Reply