தென்னா பிரிக்காவில் நடைபெற்றுவரும் கொன்பெடரேஷன் கிண்ண கால்பந்து போட்டியில் உலக சாம்பியனான இத்தாலி அணியை எகிப்து 10 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
இத்தாலி அணி சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி ஒன்றிடம் தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
ஜொஹன்னஸ்பேர்க் எலீனா பார்க் அரங்கில் நேற்று “பி’ பிரிவுக்காக நடந்த இந்த போட்டியில் எகிப்து அணி இத்தாலிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதன்மூலம் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எகிப்தின் மொஹமட் ஹோமோஸ் கோலொன்றை போட்டு வெற்றியை உறுதிசெய்தார். உலக சாம்பியனான இத்தாலியினால் கடைசிவரை கோலொன்றை போடமுடியாமல் போனது.
கடந்த 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் கொன்பெடரேஷன் கிண்ண போட்டி ஒன்றில் ஐரோப்பிய கண்ட அணி ஒன்றை ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணியொன்று வீழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னர் 2003 ஆம் ஆண்டு கொன்பெடரேஷன் போட்டியில் கெமரூன் அணி ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தேர்வான துருக்கி அணியை வீழ்த்தி இருந்தது.
இந்த வெற்றியுடன் எகிப்து அணி கொன்பெடரேஷன் கிண்ண அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. எனினும் “பி’ பிரிவில் இருந்து பலம்வாய்ந்த பிரேசில் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.