பயங் கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் உன்னதப் பணிக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதனை சிறப்பாக வழிநடத்திய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்றை ஸ்ரீலங்கா அமரபுர நிக்காய மற்றும் ஸ்ரீலங்கா ராமன்ய நிக்காய ஆகிய உயர் பௌத்த பீடங்கள் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த வைபவம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இடவசதி மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு சுமார் ஆயிரம் பேரளவானோரே இவ்வைபவத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இரு பௌத்த பீடங்களும் தெரிவித்துள்ளன.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் இரு பீடங்களும் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ்விரு பீடங்களும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியொன்றை நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்தடவையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பகல் 1.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட் மாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.