நாட ளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தொகை 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் உயரதிகாரி, சுரங்கனி பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் :-டெங்கு நோயினால் இதுவரை 10,417 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
டெங்கு நோய் பாதிப்பினால் நேற்று முன்தினம் நாடளாவிய ரீதியில் அறுவர் மரணமடைந்துள்ளதுடன், இவர்கள் களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்கள் இனங்காணப்பட்டு டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர்.
நோய் காணப்படும் பிரதேச சுகாதார அத்தியட்சகர் பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய குழுக்களும் செயற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் நேற்றுமுன்தினம் வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1198 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1288 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 1601 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.