வட மாகாணம் விடுவிக்கப்பட்டிருப்பதைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதற்குப் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை 9.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவ்வுரையை சகல அரசாங்க நிறுவனங்களினதும் அதிகாரிகளும் செவிமடுக்கவும், பார்க்கவும் ஏற்பாடு செய்யுமாறும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
இந்த அறிவுறுத்தலை அவர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும், சகல திணைக்களத் தலைவர்களுக்கும், சகல கூட்டுத்தாபன நியதிச் சபைத் தலைவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.