இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்க நிபந்தனைகள் விதிக்க கோரும் எம்பி மனோ கணேசன்!
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் எம்பி மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கூட்டணியின் குழுவினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சமூகத்தின்பால் நம்பிக்கையிழந்த தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையான ஐரோப்பிய ஒன்றியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைப்பதாக மனோ கணேசன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.
அந்த வகையில் பயங்காரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இடைநிறுத்துதல், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பித்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் பொறுப்புக் கூறல், தண்டனை பெற்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவித்தல் மற்றும் நவீன அடிமைத்துவ அம்சங்களை கொண்ட மலையகத் தமிழர் சமூகத்துக்குள் வரும் ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் போன்ற கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனோ குழுவினர் மகஜராக கையளித்துள்ளனர். அதேநேரம் இக்கோரிக்கைகளை இலங்கைக்கு நிபந்தனைகளாக விதிக்க வேண்டும் என்றும் கோட்டுக் கொண்டனர். இலங்கை இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டாலே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் மனோ குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.