பட்டலந்த படுகொலையோடு தமிழர் படுகொலையும் விசாரிக்க வேண்டும் !
படலந்த வதைமுகாமிற்கு மூன்று மாதங்களில் வெளிச்சம் பாய்ச்சிய அனுர தரப்பு தமிழர் மீது நடைபெற்ற படுகொலைகளை விசாரிக்குமா… ? ஜி.ஸ்ரீநேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புகள் 1956 இல் இருந்து ஆரம்பித்து 2009 வரை நடைபெற்றன. தற்போது தமிழர் பண்பாட்டு அழிப்புகள் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கில் குறிப்பாக 1978 தொடக்கம் 2009 இற்கு இடைப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட, அவசர காலச் சட்ட ஆட்சியில் வடக்கு கிழக்கில் பட்டலந்த வதைமுகாமையும் மிஞ்சிய பல வதை முகாம்கள் மற்றும் கொலை முகாம்கள் காணப்பட்டன அவற்றில் தமிழர்கள் வகை தொகையின்றி சித்திரவதைகள் மற்றும் பாலியல்வதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் தகுதி கடந்தகால அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளன.
ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் சம தருமம் தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப் படையினர் என்பதாலும் இந்த சந்தேகம் தமிழர்களுக்கு கனதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.